பிறந்த அன்றே தத்துகொடுத்த இந்திய தாய்: தாயை தேடி அலையும் சுவிஸ் குடிமகள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
420Shares

நான் எனது பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை என்கிறார் சுவிட்சர்லாந்தின் சூரிச்சுக்கு அருகில் வசிக்கும் பீனா மகிஜானி (41).

காரணம், அது அவரது பிறந்த நாள் மட்டுமல்ல, அவர் தத்துக்கொடுக்கப்பட்ட நாளும் அதுதான்.

அவர் பிறந்தது இந்தியாவில், பிறந்த அன்றே அவரது தாய் அவரை தத்துக்கொடுத்துவிட்டார்.

அப்போது, இந்தியாவில் வாழ்ந்த சுவிஸ் பெண் ஒருவரை மணந்திருந்த இந்தியர் ஒருவர், பீனாவை தத்தெடுத்துக்கொண்டார்.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு குடும்பம் சுவிட்சர்லாந்துக்கு இடம்பெயர்ந்தது.

பீனா சிறு பெண்ணாக இருக்கும்போது, கர்ப்பிணி ஒருவரைக் கண்டு அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்று கேட்க, அவர் வயிற்றில் அவரது குழந்தை இருக்கிறது என்று கூறியிருக்கிறார் அவரது தாய்.

நானும் அதேபோல்தான் உங்கள் வயிற்றில் இருந்தேனா என்று கேட்க, இல்லை என்றிருக்கிறார் அந்த தாய்.

அதைக் குறித்து கேட்க விரும்பிய பீனாவை அது குறித்து பேசுவதற்கு அனுமதியில்லை என்று கூறிவிட்டார் அவரது இந்திய தந்தை.

பின்னர், வளர்ந்து திருமணமாகி, தனக்கு ஒரு மகன் பிறந்தபோது, மீண்டும் தனது பெற்றோரை தேடவேண்டும் என்ற எண்ணம் பீனாவுக்கு ஏற்பட்டுள்ளது. தான் பிறக்கும்போது, தன்னைப் பெற்ற தாய்க்கு 18 வயது என்பதும், அவர் சராசரி இந்தியரைவிட வெள்ளையாக இருப்பார் என்பதும் மட்டுமே பீனாவுக்கு தன் தாயைக் குறித்து தெரிவிக்கப்பட்ட விடயங்கள்.

வருடக்கணக்காக தாயைத் தேடி அலையும் பீனா சந்தித்தெல்லாம் ஏமாற்றம்தான். முதலில் பெர்னிலுள்ள இந்திய தூதரகத்தை அணுகியபோது, தனது பெற்றோரைக் குறித்த எந்த விவரத்தையும் பீனாவால் கொடுக்கமுடியாததால், அவர்களால் எந்த உதவியையும் செய்ய இயலவில்லை.

இந்திய சட்டங்களோ அந்த காலகட்டத்தில் எந்த உதவியும் செய்ய இயலாத நிலையில் இருந்தன.

பின்னர் இந்திய சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டபின்னரும், தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தையின் உரிமைகள் எவ்வகையிலும் தத்துக்கொடுத்த பெற்றோரின் உரிமைகளை மீறக்கூடாது என அவை கூறியதால், பெற்றோர் குறித்த தகவல்களை பிள்ளைகளுக்குக் கொடுக்க தத்துக்கொடுக்கும் ஏஜன்சிகள் அஞ்சின.

ஆகையால், பீனா இன்னமும் தன்னை தத்துக்கொடுத்தது தொடர்பான கோப்புகளைப் பெற இயலவில்லை.

ஆனால், இப்போது அவருக்கு இருக்கும் ஒரே பயம், தன்னை தத்துக்கொடுத்த தாய் உயிருடன் இருப்பாரா, அவரது மகள் சுவிட்சர்லாந்தில் நன்றாக இருக்கிறாள் என்பது அவருக்கு தெரியுமா இல்லையா என்பதுதான் அது.

பீனாவைப் பொருத்தவரை, தன் பெற்றோரைக் கண்டுபிடிப்பதைவிட, தன்னை ஏன் அவர்கள் தத்துக்கொடுத்தார்கள் என்ற கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிப்பதுதான் முக்கியம் என்கிறார்.

அந்த கேள்விக்கான விடையைக் கண்டுபிடிக்கும்வரை தனக்கு நிம்மதி இல்லை என்கிறார் பீனா.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்