சுவிஸ் தூதரக அலுவலர் விவகாரம்: மீண்டும் இலங்கையுடன் நல்லுறவை தொடர சுவிட்சர்லாந்து விருப்பம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் தூதரக அலுவலர் ஒருவர் கொழும்புவில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் இலங்கையுடன் நல்லுறவை தொடர சுவிட்சர்லாந்து விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு சுவிஸ் தூதரகம் அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றில், சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் இருந்த நேர்மறையான கூட்டுறவை மீண்டும் தொடரும் வகையிலான ஒரு சூழல் விரைந்து திரும்பும் என தூதரகம் நம்புகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தூதரக அலுவலர் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட சில தவறான புரிதல்கள், மற்றும் அவர் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த உறவு பாதிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக ஆதாரமற்ற விடயங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தேவையில்லாமல் பாதிக்கப்பட்டது, என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தான் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிட வற்புறுத்தப்பட்டதாக தூதரக ஊழியர் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். ஆனால், விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள் அவரது புகாருக்கு எவ்வகையிலும் ஆதரவாக இல்லை என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்தார்கள்..

அதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வெளிநாட்டு தூதரகங்களுக்காக வேலை செய்வோருக்கு பாதுகாப்பளிப்பதை உறுதி செய்யவேண்டும் என இலங்கையை சுவிஸ் தூதரகம் கேட்டுக்கொண்டது.

உள்ளூர் அதிகாரிகள் உள்ளூர் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்பதை புரிந்துகொண்டதால்,தூதரக அலுவலர்களின் நலன் வேலைச்சூழல் மற்றும் ஆகியவை குறித்து இரண்டு நாடுகளுமே தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும் என்பதை தூதரகம் புரிந்துகொண்டதாக அது வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், எந்த நாடாக இருந்தாலும் சரி, தனது எல்லைக்குள்ளிருக்கும் மற்ற நாட்டு தூதரக அலுவலர்களை பாதுகாப்பது அந்த நாட்டின் பொறுப்பு என்பதை சுவிட்சர்லாந்து நினைவுகூர்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்