கருணைக்கொலைக்காக தாயை அழைத்துவந்த பிரித்தானிய பெண் மரணம்: வழக்கிலிருந்து மருத்துவர் விடுவிப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கருணைக்கொலைக்காக தாயை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவந்த பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய மருத்துவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கருணைக்கொலைக்காக பிரித்தானியாவிலிருந்து தனது 95 வயது தாயை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவந்திருந்தார் அவரது 58 வயது மகள்.

தாய் அவரது விருப்பத்தின்படி கருணைக்கொலை செய்யப்பட்டார். இதற்கிடையில் திடீரென அந்த 58 வயது பெண் சுகவீனமடைய, மருத்துவர் ஒருவர் வரவழைக்கப்பட்டார்.

அவர் வந்து தூக்க மருந்து ஒன்றைக் கொடுக்க, சில மணி நேரத்திற்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அந்த பெண் கோமா நிலைக்கு சென்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின் அவர் உயிரிழந்தார்.

அந்த மருத்துவரின் கவனக்குறைவுதான் அவரது மரணத்திற்கு காரணம் என வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், உடற்கூறு ஆய்வில், அந்த பெண்ணுக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதும், அதற்கு காரணம் அவரது மூளையில் சரியானபடி உருவாகாமல் இருந்த இரத்தக்குழாய்கள் காணப்பட்டதும்தான் காரணம் என்பது தெரியவந்தது.

அவை எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயத்திலேயே இருந்துள்ளன.

எனவே தற்போது அந்த மருத்துவரது கவனக்குறைவு அந்த பெண்ணின் மரணத்துக்கு காரணம் அல்ல என்பது தெரியவந்துள்ளதால், அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருக்கு இழப்பீடாக 8,500 சுவிஸ் ஃப்ராங்குகளும் வழங்கப்பட உள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்