கேமரூன் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் சுவிட்சர்லாந்தில் கைது: அத்துமீறியதால் பொலிஸ் அதிரடி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சிகிச்சைக்காக கேமரூன் ஜனாதிபதி சுவிட்சர்லாந்து வந்துள்ள நிலையில், அவரது பாதுகாவலர்கள் சிலர் சுவிஸ் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேமரூன் ஜனாதிபதியான Paul Biya, அவ்வப்போது மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்துக்கு வந்து, ஜெனீவாவில் உள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் தங்குவது வழக்கம்.

அதேபோல் இம்முறையும் ஜூன் மாதம் 23ஆம் திகதியிலிருந்து Biya அதே ஹொட்டலில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அவரது எதிர்ப்பாளர்கள் பலர் Biya தங்கியிருந்த ஹொட்டலின் முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை அங்கிருந்து அகற்றுவதற்காக, ஜெனீவா கலவரத் தடுப்பு பொலிசார், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த களேபரத்தில், ஆர்ப்பாட்டத்தை படம் பிடிக்கச் சென்ற சுவிஸ் ஊடகவியலாளர் ஒருவரை சிலர் தாக்கி அவரது கெமரா, பர்ஸ் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டனர்.

Adrian Krause என்ற அந்த ஊடகவியலாளருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதோடு, அவரது உடைமைகளும் சேதமடைந்தன.

இந்த சம்பவத்தையடுத்து Adrian Krause, பொலிசாரிடம் நடந்த சம்பவம் குறித்து புகாரளித்தார்.

உடனடியாக கேமரூன் தூதர் சுவிட்சர்லாந்துக்கு அழைக்கப்பட்டு இத்தகைய சம்பவங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என எச்சரிக்கப்பட்டார்.

அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக நேற்று ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கேமரூன் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் என பொலிசார் தெரிவித்தனர்

அவர்களில் ஐந்து ஆண்கள் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்ட நிலையில், ஆறாவது நபரான ஒரு பெண் தூதரக பாஸ்போர்ட் உடையவர் என்பதால் அவர் மட்டும் விடுவிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்