பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கொள்ளை: தேடப்படும் முக்கிய குற்றவாளி சுவிஸில்?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
368Shares

சர்வதேச அளவில் டசின் கணக்கான பெண்களை ஏமாற்றி கொள்ளையில் ஈடுபட்ட நபர் சுவிட்சர்லாந்தில் தமது கைவரிசையை காட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபருக்கு சூரிச் நகரில் ஒரு காதலி இருப்பதாகவும், அவரை சந்திக்க சுவிஸ் வர இருப்பதாகவும் செய்தி ஊடகம் ஒன்று எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டவரான ஷிமோன் ஹயத் தம்மை ஒரு பில்லியனரின் வாரிசு என அறிமுகப்படுத்தி, இதுவரை டசின் கணக்கான பெண்களை ஏமாற்றியுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இவர் பல பெண்களை மட்டுமின்றி, நிறுவனங்களையும், திருமணமான தம்பதிகளையும் ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tinder போன்ற துணை தேடும் செயலிகளில் பெண்களுடன் உரையாடி, பின்னர் அவர்களுடன் தொலைபேசியில் நட்பு பாராட்டி, அவர்களின் நம்பிக்கையை பெறுவார்.

பின்னர் காதலிப்பதாக கூறி, முழுவதுமாக அவர்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர், முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை முடிக்க பணம் தேவைப்படுவதாகவும், நிதி தந்து உதவ முடியுமா என கேட்டு, அவர்களின் சேமிப்பு பணம் மொத்தமாக கொள்ளையிட்டு தப்புவதே இவரின் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நார்வே நாட்டின் பெண் ஒருவரும் ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவரும், ஷிமோன் ஹயத் தொடர்பில் புகார் அளித்த நிலையில், இவரது தொடர் மோசடி அம்பலமானது.

இதுவரை இவர் சுமார் 600,000 பிராங்குகள் அளவுக்கு பல பெண்களிடம் இருந்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

பின்லாந்து பொலிசாரிடம் ஒருமுறை சிக்கிய இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு நாடு கடத்தப்பட்டார்.

அங்கிருந்து பிணையில் வெளிவந்த ஷிமோன், தொடர்ந்தும் தமது கைவரிசையை காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவரது நடவடிக்கைகளை கண்காணித்துவரும் பொலிசார், தற்போது சூரிச் மண்டல பெண் ஒருவருடன், ஷிமோன் பழகி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சூரிச் வழியாக செல்லும் விமானம் ஒன்றில் முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஷிமோன் ஹயத் உடன் தொடர்பில் இருக்கும் அந்த சுவிஸ் பெண் குறித்து தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்