இணைய வழி தாக்குதலுக்கு எதிராக சுவிஸ் அரசின் புதிய நடவடிக்கை!

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து அரசு இணையவழி தாக்குதல்களை எதிர்கொண்டு, நாட்டின் முக்கியமான தகவல்களை பாதுகாக்க உள்கட்டமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, அரசு ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 15,000 பேரின் மின்னஞ்சல்கள், கடவுச்சொற்கள் ஒன்லைனில் வெளியாகியதாக செய்தி வெளியானது. மேலும், அதன்மூலம் வர்த்தகங்கள் நடைபெற்றதாகவும் வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, சுவிஸ் அரசு தகவல்கள் குறித்த உள்கட்டமைப்புகளை பலப்படுத்த நினைத்தது. அதற்காக ஊழியர்களுக்கு மென்பொருள், வன்பொருள் சாதனங்கள் தொடர்பான பயிற்சிகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இணைய அச்சுறுத்தல்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்தும் பயிற்சிகள் அளிக்க தொடங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற அமெரிக்க தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம், இணைய பாதுகாப்பை கட்டமைக்க சுவிஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இது குறைந்த தரநிலையில் புதிதாக மேம்படுத்தப்பட்டதாகும்.

இவை அனைத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வழிமுறைகளில், இணையவழி தாக்குதலுக்கு எதிராக மற்றும் உள்கட்டமைப்பை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு அரசுக்கு சொந்தமான ஆயுதம் தொடர்பான தகவல்கள் பெரிய அளவில் திருடப்பட்டன. அதில் சுமார் 20 ஜிகா பைட்ஸ் அளவிலான தகவல்கள் திருடப்பட்டதாக கருதப்பட்டது.

அப்போது பாராளுமன்ற குழுவானது, சுவிஸ் ராணுவம் இணையவழி தாக்குதலை எதிர்கொள்ள போதுமான அளவு திட்டமிட தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், அந்த தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே தற்போது இணையவழி உள்கட்டமைப்பை சுவிஸ் அரசு பலப்படுத்துவதாக கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்