புலம்பெயர்ந்தவருக்கு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் வழங்கிய அசாதாரண தீர்ப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

புலம் பெயர்ந்தவர் ஒருவருக்கு வழக்கத்துக்கு மாறாக சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து வாழ சுவிட்சர்லாந்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஐரோப்பிய கூட்டமைப்பின் மனித உரிமைகள் சட்டத்தின் தனிப்பட்ட வாழ்க்கை உரிமை பிரிவின் கீழ் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் வாழ அனுமதியளித்து சுவிஸ் ஃபெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய ஒன்றிய இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களின்படி மூன்றாவது நாடுகளைச் சேர்ந்த ஒருவர் சுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கான உரிமை தானாகவே கிடைக்காது என்ற நடப்பு இருக்கும் நிலையில், இந்த வழக்கு அசாதாரணமான ஒன்றாக கருதப்படுகிறது.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஒரு நபர் தனது ஜேர்மன் மனைவியுடன் 2004ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு வந்தார்.

அவருக்கு வாழிட உரிமம் வழங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு அவர் தனது மனைவியைப் பிரிந்ததால், சூரிச் புலம்பெயர்தல் துறை அவரது உரிமத்தை வாபஸ் பெற்றது.

பின்னர் சுவிஸ் பெண் ஒருவரை மணந்த அந்த நபர் மீண்டும் வாழிட உரிமம் பெற்றார். அந்தப் பெண்ணையும் அவர் பிரிந்ததால் மீண்டும் அவரது உரிமம் பறிக்கப்பட்டது.

தான் சுவிட்சர்லாந்தை விட்டு போக விரும்பவில்லை என்று கோரி அவர் வழக்குத் தொடர்ந்தார். அவர் ஐரோப்பிய கூட்டமைப்பின் மனித உரிமைகள் சட்டத்தின் தனிப்பட்ட வாழ்க்கை உரிமை பிரிவின் கீழ் தனது திருமண வாழ்வை முடிவு செய்யும் உரிமை தனக்கு இருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் சூரிச் நிர்வாக நீதிமன்றம் அவரது இரண்டு திருமணங்களும் முடிவுக்கு வந்து விட்டதால் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் வாழ அவருக்கு உரிமையில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

ஆனால் சுவிஸ் ஃபெடரல் நீதிமன்றமோ அந்த நபரின் வாழிட உரிமத்தை நீட்டிக்க தீர்மானித்து அவரது வழக்கில் ஒரு அசாதாரணமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சூரிச் நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், பத்தாண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து சமுதாயத்தோடு ஒன்றிணைந்து விட்டவர்களை வெளியேற்றுவதற்கு இந்தக் காரணம் போதுமானது அல்ல என்று ஃபெடரல் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இப்படிப்பட்டவர்களின் வாழிட உரிமையைப் பறித்தல் தனிப்பட்ட வாழ்வு உரிமையின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சமமாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்கு கற்ற மற்றும் சிறந்த தொழிற்பயிற்சி பெற்ற தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது நாட்டு நலனுக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ள நீதிபதிகள் வெளி நாட்டவர்கள் மீதான ஃபெடரல் சட்டத்தின்படி அந்த குறிப்பிட்ட நபருக்கு சுவிட்சர்லாந்தில் வாழ அனுமதி அளிக்கப்பட்டிருக்காது, ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்பின் மனித உரிமைகள் சட்டத்தின் தனிப்பட்ட வாழ்க்கை உரிமை பிரிவின் கீழ் தொடுக்கப்பட்டதால் மட்டுமே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, எனவே இது ஒரு அசாதாரணமான தீர்ப்பு ஆகும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers