செங்காலன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் பக்திபூர்வமாக ஆரம்பம்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
65Shares
65Shares
ibctamil.com

ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமையன்று (25.05.2018) கொடியேற்றத்துடன் பக்திபூர்வமாக ஆரம்பமாகியது.

அன்று காலை 7 மணியளவில் விசேட அபிசேகத்துடன் ஆரம்பமான கொடியேற்ற நிகழ்வில் முற்பகல் 10 மணிக்கு கொடிச்சீலை வீதி வலமாக எடுத்து வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட பூசைகள் இடம்பெற்றன. முற்பகல் 11 மணிக்கு அந்தணர்களின் வேதம் முழங்க மங்களவாத்தியம் ஓங்கி ஒலிக்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஆலய பிரதமகுரு சிவாகமகிரியாஜோதி, ஈசானசிவாச்சாரியார், ஞானவித்தகர் சிவஸ்ரீ பா.ஜோதிநாதக்குருக்கள் கொடியேற்றிவைத்தார்.

இந்த நிகழ்வில் சிவஸ்ரீ பா.ஜோதிநாதக்குருக்கள் தலைமையில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள சர்வசாதகாச்சாரியார் சிவகாமஜோதி சிவஸ்ரீ கு.குகேஸ்வரக்குருக்கள் லண்டனிலிருந்து வருகை தந்துள்ள சிவஸ்ரீ சிவராம சர்மா சுவிஸில் வசிக்கின்ற முரளிதரக்குருக்கள் ஆகிய குருமார்கள் கலந்துகொண்டனர்.

இந்த மகோற்சவகாலத்தில் மங்கள இசை வழங்க தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள பிரபல நாதசுர வித்துவான் அமரர் பா.பஞ்சாபிகேசனின் மகனான விக்கினேஸ்வரன் சாவகச்சேரிர் தவில்வித்துவான் முருகானந்தம் நாகேந்திரன் ஆகியோருடன் ஆலய ஆஸ்தான வித்துவான் மா.செந்தூரன் இணைந்து மங்கள இசை வழங்கி வருகின்றனர்.

கொடியேற்றத் திருவிழா அன்று ஜோதிரூபக்காட்சியாக காட்சியளித்த கதிர்வேலர் 2 ஆம் திருவிழா அன்று சட்கோணக்காட்சி கொடுத்து வேதபாராயணத்துடன் வீதியுலா வந்தார்.

ஆலய உற்சவத்தில் 3 ஆம் திருவிழாவில் சக்திரூபக்காட்சி கொடுத்து திருமுறைப்பாராயணத்துடன் உலா வந்தார். 4 ஆம் திருவிழா குருந்தமரத்திருவிழாவாகவும் நடைபெற்று 28.05.2018 மாலை வைகாசிவிசாகம் 108 சங்காபிசேகம் நடைபெறும்.

தொடர்ந்து 5 ஆம் திருவிழா கப்பல் திருவிழாவாகவும், 6 ஆம் திருவிழா மாம்பழத் திருவிழாவாகவும் 7 ஆம் திருவிழா வேட்டைத்திருவிழாவாகவும், 8 ஆம் திருவிழா சப்பறத்திருவிழாவாகவும் நடைபெற்று சனிக்கிழமை (02.06.2018) காலை 07.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி கதிர்வேலர் தேரில் பவனி வரவிருக்கிறார்.

அடுத்தநாள் தீர்த்தத்திருவிழா நடைபெற்று அன்று மாலை 17.30 மணிக்கு ஊஞ்சல்பாட்டு கொடியிறக்கம் நடைபெறவிருக்கின்றன. மறுநாள் திங்களன்று திருக்கல்யாணமும் செவ்வாயன்று வைரவர்மடையும் நடைபெறவிருக்கின்றன.

விசேட இசைநிகழ்ச்சிகள்

இந்த உற்சவகாலத்தின்போது தினமும் விசேட இசைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல்நாள் இவ் ஆண்டு ״இசைக்குயில் விருதுபெற்ற உதயகுமார் ஆதிஸ்சா மற்றும் அவரது சகோதரி உதயகுமார் விதுசா ஆகியோரின் இசைக்கச்சேரி இடம்பெற்றது.

இவர்களுக்குப் பக்கவாத்தியமாக சரவணபவானந்தன் சஞ்சயன் மிருதங்கமும் தங்கேஸ்வரன் அர்ச்சனா வயலினும் சுந்தரலிங்கம் ஐங்கரன் கடமும் வாசித்து சிறப்பித்திருந்தார்கள்.

இரண்டாம் நாள் உற்சவத்தின்போது தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள ஹைதரபாத் சிவா அவர்கள் சிறப்புக்கச்சேரி நிகழ்த்தினார். இவருக்குப் பக்கவாத்தியமாக சிவராஜாசர்மாவின் புதல்வர்களான சுதன் மிருதங்கமும்,ரூபன் வயலினும் வாசித்து சிறப்பித்திருந்தார்கள்.

இலங்கையில் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 4 வது அனைத்துலக முருகபக்தி மாநாட்டில் ஆலயத்தின் சார்பில் கதிர்காமக்கந்தன் மீதான திருப்புகழ் என்ற நூல் மற்றும் இறுவெட்டு ஆகியன வெளியிட்டுவைக்கப்படவுள்ளன.

இந்த நூலில் அருணகிரிநாதர் பாடிய கதிர்காமம் மீதான பதினான்கு திருப்புகழ்களும், திருகோணமலைத்திருத்தலம், அருட்கோணமலைத்திருத்தலம் (மாவிட்டபுரம் கந்தசுவாமிகோவில்) ஆகியவற்றின் மீதான இரண்டு திருப்புகழ்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நூலை இசையமைத்து இறுவெட்டாக வெளியிட தேவையான ஏற்பாடுகளை ஹைதரபாத் சிவா மேற்கொண்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்