கண்ணீர் விட்ட அகதி, காப்பாற்றிய சுற்றுலாப்பயணிகள்: மர்மப் பின்னணி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்திலிருந்து மொராக்கோ செல்லும் விமானத்தில் ஏறிய சுற்றுலாப்பயணிகளின் எதிர்ப்பினால் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட இருந்த ஒருவர் காப்பாற்றப்பட்டார்.

விமானத்தில் ஏறிய சுற்றுலாப்பயணிகளில் இருவர் யாரோ அழும் சத்தத்தைக் கேட்டனர்.

அது ஒரு குழந்தையின் அழுகுரலாக இருக்கும் என்று எண்ணிய அவர்கள் பின்னர் இரண்டு வாட்டசாட்டமான மனிதர்களுக்கு நடுவில் உட்கார்ந்திருக்கும் ஒருவர் அழுது கொண்டிருப்பதைக் கண்டனர்.

பின்னர்தான் அந்த இருவரும் பொலிசார் எனவும், அவர்கள் நடுவிலிருந்த நபரை அவரது விருப்பத்திற்கு மாறாக நாடு கடத்த முயலுவதும் தெரிய வந்தது.

அந்த சம்பவத்தின்மீது தம்பதியர் கவனம் செலுத்தவும் விமான பணிப்பெண்கள் அந்த தம்பதியரிடம் அவர்கள் அசௌகரியமாக உணர்ந்தால் வேறு விமானத்தில் பயணிக்குமாறு அறிவுறுத்தினர்.

இதனால் கோபமடைந்த அந்த தம்பதியர் அசௌகரியமாக உணருவது அந்த பயணிதான் என்றும் தாங்களல்ல என்று கூறியுள்ளனர்.

அவர்களுடன் வேறு சில தம்பதியரும் சேர்ந்து கொள்ள அந்த பொலிசார் வேறு வழியின்றி அவர்களுடன் இருந்த பயணியுடன் விமானத்திலிருந்து இறங்கினர்.

இது ஒரு சாதாரண சம்பவம் போல் தோன்றினாலும், இதன் பின்னணியில் ஒரு பெரிய உண்மை ஒளிந்திருக்கிறது.

அதாவது பயணிகள் விமானங்களில்கூட தற்போது சுவிஸ் அதிகாரிகள் கட்டாயமாக மக்களை நாடு கடத்துகிறார்கள் என்பதுதான் அது.

2007ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் 37 சதவிகிதம்பேர் தங்கள் சம்மதத்தின் பேரிலேயே நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 22 சதவிகிதமாகக் குறைந்தது. 2017 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்ட 7147 பயணிகளில் 78 சதவிகிதம்பேர் பொலிசாருடன் பயணித்தனர். சிலரை பொலிசார் வாயில் துணியைக் கட்டியும் கைகளைக் கட்டியும் அழைத்துச் சென்றனர்.

அத்துடன் 2017 ஆம் ஆண்டு நாடு கடத்தப்படுபவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட 3,343 இருக்கைகள் கேன்சல் செய்யப்பட்டன, காரணம் நாடு கடத்தப்பட இருந்தவர்கள் தலைமறைவாகியிருந்தனர் அல்லது தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்ல மறுத்தனர்.

இது குறித்து விசாரித்தபோது சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தலுக்கான மாகாண செயலகம், எந்த விமான சேவைகள் மக்களை நாட்டிலிருந்து நாடு கடத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers