சுவிட்சர்லாந்து நாட்டில் மில்லியன் டொலர்கள் அளவில் வரி செலுத்துவதற்கான ஆவணங்களை வெளியிட்ட Herve Falciani, சுவிஸ் பிறப்பித்த கைது ஆணையின்படி ஸ்பெயினில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் கடந்த 2000ஆம் ஆண்டு, HSBC வங்கிக்கான ஐடி ஊழியராக பணியில் சேர்ந்தவர் Herve Falciani. இவர், அதன் பிறகு ஜெனிவாவில் உள்ள வங்கி அலுவலகத்திற்கு 2006ஆம் ஆண்டு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு வங்கி வாடிக்கையாளர்கள் குறித்த பட்டியலை கைப்பற்றிய Falciani, அதன் மூலமாக வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை விற்க லெபானுக்கு சென்றுள்ளார்.
சுவிஸ் அதிகாரிகள், Falciani பணத்திற்காக இவ்வாறு செய்கிறார் என குற்றஞ்சாட்டினர். ஆனால், லெபனான் வங்கி அதிகாரிகளுக்கு Falciani-யின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், சுவிஸ் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல் பட்டியலை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய நிதி அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட Falciani, அவர்கள் மூலமாக ஏராளமான வரி ஏய்ப்பு தணிக்கைகளை பரிமாற்றம் செய்ய தொடங்கினார்.
ஆனால், தாம் பணத்திற்காக இவ்வாறு செய்யவில்லை என்றும், வங்கிகள் எவ்வாறு வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பணமோசடிகளில் ஈடுபடுகின்றன என்பதை அம்பலப்படுத்தவே இவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.
அதன் பின்னர், 2012ஆம் ஆண்டு படகு மூலமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற Falciani, பார்சிலோனாவில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஓரிரு மாதங்கள் ஸ்பெயின் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் 2013ஆம் ஆண்டு, Falciani ஸ்பெயின் நாட்டு சட்டப்படி எந்த தவறும் செய்யவில்லை என்றும், சுவிட்சர்லாந்து அரசு தான் அவருக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கூறி அவரை விடுவித்தது.
சுவிஸ் நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு, HSBCக்கு சொந்தமான தனியார் வங்கிகளின் 1,20,000 வாடிக்கையாளர்களின் சுமார் 222 பில்லியன் டொலர்களை, வரி அதிகாரிகளிடம் இருந்து மறைக்க உதவியதாகக் கூறி, Falciani-க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
Falciani செய்த இந்த குற்றம் ‘சுவிஸ் லீக்ஸ்’ ஊழல் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த வழக்கு மீதான விசாரணைக்கு Falciani ஆஜராகவில்லை. மேலும், சுவிஸ் நாட்டில் அவர் நுழையவில்லை.
இந்நிலையில், நேற்று சுவிட்சர்லாந்து பிறப்பித்த கைது ஆணையைக் கொண்டு, மாட்ரிட் நகரில் Falciani பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
