சுவிற்சர்லாந்து பேர்ன் ஞானலிங்கேச்சுரத்தில் திருவள்ளுவர் குருவழிபாடு

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்து பேர்ன் நகரில் "தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்" என திருமூலரும் மொழிந்த திருவள்ளுவர் குருவழிபாடு அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் மிகு சிறப்பாக நடைபெற்றது.

நாடு, மொழி, இனம், அறம், சமயம் இவற்றிக்கு அப்பாற்பட்ட பொன் மொழிகள், உலகில் பல இனங்கள் வேட்டை ஆடி உலவிய காலத்தில் தமிழன் அளித்த அறிவு நூல் என இன்றும் சான்று பகர திருவள்ளுவரே காரணமாவார். திருவள்ளுவர் பெருமான் தமிழன்னை பெற்றெடுத்த பெருமகனாவார்.

வள்ளுவரை உலகுக்குக் கொடுத்து தமிழ் வான் புகழை ஈட்டிக் கொண்டது. இப் பொய் சொல்லாத் தமிழ்ப்புலவன் குருவழிபாட்டுத் திருநாள், தமிழின் பெருமை உள்ளத்தில் ஏற்றி இன்பச் செவிகள் தெய்வத்தமிழில் தளைக்க, நாளும் கருவறையில் தாய்த்தமிழில் வழிபாடு காணும் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரத்தில் மிகு சிறப்புடன் நடைபெற்றது தமிழருளாகும்.

அரசியலை அறிய ஓர் அரசியல்நூலாகவும், ஞானத்தை அளிக்கும் ஞானக்கருவூலமாகவும், கவிச்சுவைக்கு ஒரு காவியமாகவும், இலக்கியச் சுவையதற்க்கு இலக்கியமாகவும், பேரின்பம் நாடுவோர்க்கு ஒரு பேரின்ப நூலாகவும், இம்மைக்கும் இன்பம் நல்கி மறுமைக்கும் வீடுபேற்றினை அளிக்கும் நூலாகவும் இன்றும் விளங்கும் திருக்குறள் பொதுமறையை படைத்தளித்த பெருமைக்குரிய செந்தமிழன் திருவள்ளுவர் ஆவார் ஆகவே ஞானலிங்கேச்சுரத்தில் இப்பெருமான் வழிபாடு நடைபெறுவதாக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா தனதுரையில் எடுத்துரைத்தார்.

பேர்ன் வள்ளுவன் பாடசாலை இவ்விழாவிற்கு நல்கை (உபயம்) ஏற்றிருந்தது. பல் தொகையில் இளந்தமிழ் மாணவர்கள் தமிழர் பண்பாட்டு உடையில் தோன்றி உலகப் பெருங் கவிஞர்;, மாந்தர்கள் இவ்வுலகில் வாழ வழிகாட்டும் பொய்யா மொழிகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அளித்த கொடை திருக்குறளில் இருந்து கடவுள் வாழ்த்தினை ஓதி சிறப்புத் தமிழ்வழிபாடு நடாத்தினர்.

ஆசிரியர் திரு. பொன்னம்பலம் முருகவேள் அவர்கள் தனது நிறைவுரையில் இன்னா செய்தாரை ஒருக்க நன்னயம் செய்யச் சொன்னவர் திருவள்ளுவர், நாம் நன்மைகள் செய்யாவிடினும், தீமைகள் செய்யமால் வாழவேண்டும். அதற்கு அனைத்து தமிழர்கள் வீடுகளிலும் திருக்குறள் இருக்க வேண்டும். வீடுகளில் திருக்குறள் வெறும் நூலாக மட்டுமில்லாமல் வாழப்படும் நெறியாகவும் கொள்ளப்படவேண்டும் என உரைத்தார்.

ஞானலிங்கேச்சுரம் எழுந்தருளும் ஞானாம்பிகை உனடயா ஞானலிங்கேச்சுரரிற்கும் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது, திருவள்ளுவர் பெருமான் பொற் திருத்தேரில் எழுந்தருளி திருச்சுற்று வலம்வந்து சிவஞானசித்தர்பீடத்தில் திருக்குறள் ஓதி வலம்வந்தார்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் எனும் திருக்குறள் பொருளாக «உள்ள மலரில் வீற்றிருக்கும் கடவுளின் திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இந்த உலகில் நீடித்து வாழ்வார்» எனும் நிறைவுடன் ஞானலிங்கேச்சுரத்தில் தமிழும் சைவமும் மிளிர்ந்து வழிபாடுகள் நிறைந்தது.

குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. அறுசுவை அருளமுது படைத்து, மகேச்சுர வழிபாட்டுடன் வள்ளுவர் பெருமான் குருவழிபாடு நிறைவுற்றது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்