ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக சோதனை: சுவிஸில் பரபரப்பு

Report Print Harishan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ரயிலில் கிடந்த பெட்டி ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக நடத்தப்பட்ட சோதனையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சுவிஸின் St.Gallen பகுதியில் சென்று கொண்டிருந்த ரயிலில் அபாயகரமான ஆயுதங்கள் இருப்பதாக எழுதப்பட்ட பெட்டி ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது.

Rheintal பகுதியில் இருந்து கிளம்பியுள்ள அந்த ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் இரவு 9 மணியளவில் அந்த பெட்டியை கவனித்துள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், Rorschach ரயில் நிறுத்தத்தில் பெட்டியை சோதனையிட பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த சோதனையின் போது ரயிலில் பயணம் செய்த 50 பயணிகள் பதற்றம் அடையாமல் இருக்க முன்னரே அவர்களிடம் சட்டம்- ஒழுங்கு தொடர்பான சோதனை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் வெடிகுண்டு இருப்பதாக கருதி சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு ஏமாற்றம் தரும் வகையில் வெறும் கத்திகள் தான் இருந்துள்ளது.

பின்னர் அப்பெட்டியில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண் மூலம் அதிகாரிகள் தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பேசிய நபர், தான் ஒரு சமையல்காரர், Landquart நிறுத்தத்தில் பெட்டியை மறந்து இறங்கிவிட்டேன் என்றும் பிள்ளைகள் பெட்டியை தொடாமல் இருக்க அவ்வாறு எழுதி இருந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அந்த நபரின் மீது குற்ற வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்