சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பின்னர் விமான சேவை தொடக்கம்!

Report Print Raju Raju in இலங்கை

சென்னையில் இருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கு 36 வருடங்களுக்கு பின்னர் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியை சென்றடைய வேண்டுமானால் கொழும்பு சென்று அங்கிருந்து சாலை மற்றும் ரயில் மார்க்கமாகத்தான் செல்ல முடியும். யாழ்ப்பாணத்தில் இருந்த பலாலி விமான தளம் ராணுவ பயன்பாட்டில் மட்டும் இருந்தது.

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில், இரண்டாம் உலகப் போரின்போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான்படைத் தேவைக்காக விமானத்தளம் அமைக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி வழியாக கொழும்புவிற்கு விமானப் போக்குவரத்து இருந்து வந்தது. 1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது யாழ்ப்பாணம் பலாலிக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

யுத்தம் முடிந்த பின்னர் தற்போது இந்திய உதவியுடன் இது சர்வதேச பயணிகள் விமான நிலையமாக விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.

இதன் முதல் கட்டமாக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் விமானம் சோதனை ஓட்டமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் வந்திறங்கியது. இன்று முதல் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் அதிகாரப்பூர்வமாக செயல்பட உள்ளது.

இன்று நடைபெறும் விமான நிலையம் திறப்பு விழாவில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்