காதலித்த பெண் கர்ப்பமானாள்... அதற்காக அக்காவை கொலை செய்தேன்: தம்பியின் அதிரவைக்கும் வாக்குமூலம்

Report Print Santhan in இலங்கை

தமிழகத்தில் நகைக்காக அக்காவை தம்பியே கொலை செய்திருக்கும் சம்பவம் 10 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சண்முகம். இவருக்கு சுதா என்ற மூத்த மகள் உள்ளார்.

சுதா அப்பகுதியில் உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2007-ஆம் ஆண்டு சுதாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தினமும் வேலைக்குச் செல்லும் சுதாவை அவரது பெரியப்பா மகன் யோகேஸ்வரன் என்பவர் அழைத்துச் சென்று மருத்துவமனையில் விடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.

இப்படி தொடர்ந்து வேலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 2009 -ஆம் ஆண்டு நவம்பர் 29-ம் திகதி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவுப் பணிக்காக அன்று மாலை வீட்டிலிருந்து கிளம்பிச் சென்ற சுதா அதன் பின் வீடு திரும்பவேயில்லை.

இதனால் இது குறித்து மருத்துவனைக்கு சென்று கேட்டால், அவர் வரவே இல்லை என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சுதாவை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அப்போது, சுதா காணாமல் போன விவகாரத்தில் அவரின் மாமா ரெங்கராஜ் மற்றும் தம்பி யோகேஸ்வரன் ஆகியோர்மீது சந்தேகம் இருப்பதாக பொலிசாரிடம் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் பொலிசார் அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தாமல் அவர்களை தப்பிக்க வைத்ததுடன், புகார் கொடுத்த சுதாவின் தாய் ஜீவா மற்றும் பெற்றோரின் மீதே விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் சுதாவுக்கு திருமணம் ஆகிவிட்டதால், பெற்றோர் கொடுக்கும் புகார் செல்லாது. அவரது கணவரை புகார் கொடுக்கச் சொல்லுங்கள். விசாரணை நடத்துகிறோம் எனக் கூறி சுதாவின் தாய் ஜீவாவின் புகாரைக் பொலிசார் கிடப்பில் போட்டுள்ளனர்.

அதையடுத்து சுதாவின் கணவர் ராஜ்குமார், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையில் இருந்தநிலையில், ராஜ்குமார் 2-வது திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் சுதாவின் பெற்றோர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தனர்.

அதில், போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை. 8 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மாறியும் வழக்கில் ஒரு துருப்புச் சீட்டையும் கண்டுபிடிக்கவில்லை உள்ளிட்ட காரணங்களைக் கூறி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட, நீதிமன்றம் இது குறித்து விசாரணை செய்து தகவல் தெரிவிக்க வேண்டு மென்று நெருக்கடி கொடுத்ததால், திருச்சி மாவட்ட எஸ்பி ஜியா உல் ஹக், முசிறி டிஎஸ்பி தமிழ்மாறன் மற்றும் துறையூர் காவல் ஆய்வாளர் குருநாதன், எஸ்ஐ கலைச்செல்வன் தலைமையில் தனிப்படை அமைத்தார்.

அப்போது சுதாவின் பெற்றோர் குற்றம்சாட்டும் ரங்கராஜ் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் சென்னை தாம்பரம் பகுதியில் கார் ஓட்டுநராகப் பணியாற்றுவது தெரிந்தது. அதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் யோகேஸ்வரன், ஒரு பெண்ணை காதலித்தேன். அதன் விளைவாக அவள் கர்ப்பமானாள், இதனால் அவள் கர்ப்பை கலைக்க வேண்டும் என்பதற்காக, என் அம்மாவிடம் பணம் கேட்டேன், அவர் மறுத்ததால், அதன் பின் அக்காவிடம் பணம் கேட்டேன், ஆனால் அவள் திட்டினாள் கொடுக்க மறுத்தாள்.

வைத்திருக்கும் நகையாவது கொடு என்று கெஞ்சினேன். ஆனால் அவள் என்னை திட்டினாளே தவிர பணம் கொடுக்கவில்லை.

இதனால் சம்பவ தினத்தன்று வேலைக்குச் செல்வதற்காக துறையூரில் உள்ள மருத்துவமனை பேருந்துநிலையத்தில் காத்திருந்தார். வழக்கம்போல நான் காரில் அழைத்துச்சென்றேன்.

தீரன் நகர் அருகே மாமா ரெங்கராஜ் காரில் ஏறினார். கார் கொத்தம்பட்டி பாலம் அருகில் சென்றபோதும் அக்காவிடம் பணமும் நகையும் கேட்டோம். அவர் தர மறுத்ததால், துப்பட்டாவால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தோம்.

அதன் பின் அவளிடமிருந்த நகையை எடுத்துக் கொண்டோம். அடையாளம் தெரியாமல் இருக்கப் பாறாங்கல்லால் முகத்தைச் சிதைத்ததுடன், உடலை நாமக்கல் மாவட்டம், தாத்தாத்திரிபுரம், பெரியாண்டவர் கோயில் பகுதியில் வீசிவிட்டு வந்தோம். கொலை செய்ய பயன்பட்ட பாறாங்கல்லை வீட்டுக்குப் பக்கத்தில் வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்