விசா தொடர்பில் இலங்கை வெளியிட்டுள்ள ஒரு முக்கிய செய்தி!

Report Print Balamanuvelan in இலங்கை

சமீபத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த இலவச விசா மற்றும் விமான நிலையம் வந்திறங்கியதும் விசா அளிக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

ஆகஸ்டு மாதம் 1ஆம் திகதி முதல் 39 நாடுகளுக்கு மீண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து தெரிவித்த இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சரான John Amaratunga, தனது அமைச்சகமும் குடி வரவு குடியகல்வு திணைக்களமும் இணைந்து, மீண்டும் இலவச விசா மற்றும் விமான நிலையம் வந்திறங்கியதும் விசா அளிக்கும் திட்டத்தை கொண்டு வருவதற்காக கேபினட்டின் ஒப்புதலைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மே மாதம் 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வர இருந்த இந்த திட்டம், ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நிகழ்ந்த ஈஸ்டர் தின தாக்குதல்களைத் தொடர்ந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.

இத்திட்டம் இந்தியா, சீனா தவிர்த்து பிற நாடுகளுக்கு சோதனை முயற்சியாக ஆறு மாதங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக Amaratunga தெரிவித்தார்.

என்றாலும் சோதனை முயற்சி வெற்றி பெறுவதன் அடிப்படையில், எதிர்காலத்தில் இந்தியா மற்றும் சீனாவுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படலாம் என்றார் அவர்.

அதே நேரத்தில் ’விரும்பத்தகாதோர்’ நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் ஒரு கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குற்றவாளிகளும் பிரச்சினைகளை உண்டுபண்ணுவோரும் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், யார் இலங்கைக்குள் வருகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பு நமக்கு தேவை என்றார் அவர்.

இலங்கை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் விசா அளிக்கும் திட்டதில் சேர்க்கப்பட்டுள்ள நாடுகளாவன: ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, குரோவேஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரோமேனியா, ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, தாய்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்