உலக அளவில் முதலிடம்: சாதனை புரிந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

Report Print Arbin Arbin in இலங்கை

குறித்த நேரத்தில் புறப்பாடு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வந்து சேருதல் ஆகிவற்றின் அடிப்படையில் உலகளாவிய அளவில் நேரம் தவறாமையில் முதலிடம் பிடித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சாதனை படைத்துள்ளது.

உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பயணிகள் விமானச் சேவைகளை flightstats.com என்னும் அமைப்பு ஒவ்வொரு வினாடியும் கண்காணித்து வருகிறது.

குறிப்பிட்ட நேரத்தில் ஓரிடத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மறுமுனைக்கு எப்போது சென்று சேருகின்றது?

அங்கிருந்து எப்போது புறப்பட்டு மற்றோர் இடத்தை சென்றடைகிறது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த அமைப்பு தொடர்ச்சியாக பதிவு செய்கிறது.

அவ்வகையில், ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்னமெரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள பிரபல பயணிகள் விமானச் சேவைகள் நான்கு மாதிரியாக பட்டியலிடப்படுகின்றன.

உலகளாவிய விமானச் சேவை நிறுவனங்கள், மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனங்கள், பிராந்திய விமானச் சேவை நிறுவனங்கள், மலிவு கட்டண விமானச் சேவை நிறுவனங்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.

குறித்த பட்டியலில் உலகளாவிய விமானச் சேவை நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனங்கள் ஆகிய பட்டியலின்கீழ் நேரம் தவறாமையில் முதலிடம் பிடித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சாதனை படைத்துள்ளது.

உலகளாவிய விமானச் சேவை நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிரேசில் நாட்டின் லாட்டாம் மற்றும் மூன்றாவது இடத்தை ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் ஆகிய விமான சேவை நிறுவனங்கள் பிடித்துள்ளன.

மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனங்கள் பட்டியலில் ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் இரண்டாவது இடத்தையும் இந்தியாவின் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டுள்ள கோஏர் நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி 91.37 சதவீதம் நேரம் தவறாமையை கடைபிடித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டின் மே மாத நிலவரப்படி 90.75 சதவீதம் நேரம் தவறாமையை பின்பற்றியுள்ளது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர் தாக்குதலுக்கு பின்னர் இங்குள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையம் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட பின்னரும் இந்த சாதனையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிகழ்த்தியுள்ளது.

2018 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி மற்றும் 2019 ஆம் ஆண்டின் முற்பகுதி ஆகியவற்றை இணைத்து கணக்கிடப்பட்ட கடந்த 12 மாத காலத்தில் கொழும்புவில் இருந்து விமானங்களின் புறப்பாடு என்ற வகையில் 86 சதவீதம் அளவுக்கும்,

வந்து சேரும் விமானங்கள் என்ற வகையில் 85 சதவீதம் அளவுக்கும் நேரம் தவறாமயை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடைபிடித்துள்ளதாக ‘பிலைட்ஸ்டாட்ஸ்.காம்’ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்