ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியின் மரணம்: நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய உத்தரவு

Report Print Arbin Arbin in இலங்கை

ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட முகமது காசிம் ஸாஹ்ரன் உயிரிழந்ததை மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்ய கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில், கொழும்பு கோட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவில்,

தேவாலயங்களிலும், நட்சத்திர ஹொட்டல்களிலும் கடந்த மாதம் 21-ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் முகமது காசிம் ஸாஹ்ரன், அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட வேண்டும்.

அதற்காக, சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட உடல் சிதறல்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும்.

இந்தப் பரிசோதனையில், ஸாஹ்ரனின் சகோதரி மதனியாவைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

முகமது காசிம் ஸாஹ்ரன் மட்டுமன்றி, கொழும்பு ஷாங்ரி-லா ஹொட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய 2-ஆவது பயங்கரவாதியான இல்ஹாம் அகமதுவின் மரணமும் மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த மரபணு பரிசோதனைகள், இந்த மாதம் 15-ஆம் திகதிக்குள் செய்து முடிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 21-ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்களிலும், 3 நட்சத்திர விடுதிகளிலும் சக்தி வாய்ந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; சுமார் 500 பேர் காயமடைந்தனர். இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

அந்தத் தாக்குதலுக்கான சதித் திட்டத்தைத் தீட்டியதுடன், அதனை முன்னின்று நடத்தியதாக முகமது காசிம் ஸாஹ்ரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக ஸாஹ்ரனின் சகோதரி மதனியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலில் ஸாஹ்ரன் மற்றும் இல்ஹாம் அகமது தவிர, மேலும் 7 பயங்கரவாதிகள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...