இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய விளையாட்டு வீரர்கள்

Report Print Raju Raju in இலங்கை

பிரித்தானியாவை சேர்ந்த இரண்டு ரக்பி விளையாட்டு வீரர்கள் இலங்கைக்கு வந்த நிலையில் மர்மமான சூழலில் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவின் துர்ஹாம் நகர ரக்பி கிளப் சார்பில் 22 வீரர்கள் கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வந்தார்கள்.

இந்நிலையில் சனிக்கிழமை உள்ளூர் அணியுடன் துர்ஹாம் அணி ரக்பி போட்டியில் பங்கேற்று விளையாடிய நிலையில் பின்னர் இரவு விடுதிக்கு வீரர்கள் சென்றுள்ளனர்.

கிளப் குழுவை சேர்ந்த தாமஸ் பேடி (26) மற்றும் தாமஸ் ஹாவர்ட் (25) ஆகிய இரண்டு வீரர்கள் ஞாயிற்றுகிழமை காலை தாங்கள் தங்கியிருந்த ஹொட்டல் நிர்வாகத்திடம் தாங்கள் சுவாசிப்பதில் பிரச்சனை உள்ளதாக கூறிய நிலையில் கொழும்புவில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஹாவர்ட் ஞாயிறு அன்றே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து பேடி நேற்று உயிரிழந்தார்.

ஹாவர்டின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் உடலில் எந்தவொரு காயமும் இல்லை மற்றும் அவருக்கு உடல்நலக்கோளாறு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

துர்ஹாம் ரக்பி தலைவர் ரிச்சர்ட் வில்கின்சன் கூறுகையில், உயிரிழந்த இரு வீரர்களுக்கும் எங்கள் ரக்பி குடும்பத்தில் எப்போதும் சிறப்பான இடம் உண்டு.

இலங்கையில் உள்ள மூத்த கிளப் அதிகாரிகளிடம் தொடர்ந்து தொடர்பு கொள்வதன் மூலம் இலங்கை சுற்றுப்பயணத்தை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் என கூறியுள்ளார்.

இதனிடையில் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்து வருவதாக வெளியுறவு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்