ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும்.
ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாளாக கருதப்படுகின்றது.
இந்த தினத்தன்று கடக ராசியில் சூரியனும், சந்திரனும் இணைவார்கள்.
அந்தவகையில் ஆடி அமாவாசையான விரதம் மேற்கொள்ளும் முறைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும்?
தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம்- அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் – அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
மேலும், யாருமில்லாமல் ஆதரவற்ற நிலையில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் மிகவும் விசேஷமானது.
ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யும் முறை?
ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது.
அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பது ஐதீகம்.
எப்படி விரதம் இருக்க வேண்டும்?
- ஆடி அமாவாசை தினத்தன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான 4 மணியளவில் துயிலெழுந்து குடும்பத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தலைக்கு ஊற்றி குளித்து விடவேண்டும்.
- பின்பு உணவு மற்றும் வேறு பானங்கள் ஏதும் அருந்தாமல் வீட்டின் பெண்கள் மறைந்த முன்னோர்களுக்கு விருப்பமான உணவு பண்டங்களை தயாரிக்க வேண்டும்.
- வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து அரிசி மாவு கோலமிடவேண்டும்.
- பின்பு ஒரு மர பீடத்தை வைத்து அதன் மீது ஒரு வெள்ளை துணியை விரித்து, நமது முன்னோர்களில் ஆண் மற்றும் பெண்ணை குறிக்கும் வகையில் ஒரு வேட்டியையும் ஒரு புடவையையும் வைக்க வேண்டும்.
- அந்த பீடத்திற்கு இரு புறமும் குத்துவிளக்கில் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, பழங்கள் மற்றும் தயாரிக்க பட்ட உணவுகளை படையலாக வைத்து, முதலில் உங்கள் குலதெய்வத்தை வணங்கி பீடத்தில் வைக்கப்பட்ட துணிகளை நம் முன்னோர்களாக பாவித்து, கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும்.
- குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களின் முன்னோர்களை இம்முறையில் பூஜிக்க வேண்டும்.
விரதத்தின் போது கடைபிடிக்க வேண்டியவை என்ன?
- பூஜையின் போது ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும்.
- பூஜையை முடித்த பின்பு படையலில் சிறிதை எடுத்து காகங்களுக்கு உண்ண வைக்க வேண்டும்.
- பின்பு நீங்கள் வணங்கும் இறைவனை குறித்த மந்திரங்கள், பாடல்களை பாடி. தியான நிலையில் இருக்க வேண்டும்.
- மதியம் ஆன உடன் முன்னோர்களின் விருப்பமாக சமைக்கப்பட்ட உணவுகளை உண்டு உங்களின் விரதத்தை முடிக்க வேண்டும்.
விரதம் இருப்பதன் நன்மைகள் என்ன?
- இன்றைய தினத்தில் உணவு, ஆடை மற்றும் பிற எந்த வகையான தான தர்ம காரியங்களை செய்வது இறந்த முன்னோர்களது ஆசிகள் என்றென்றும் அக்குடும்பத்தின் சந்ததியினருக்கு பெற்று தரும்.
- பரம்பரையில் ஏற்பட்டிருக்கும் தேவ மற்றும் பித்ரு சாபங்களை போக்கும்.
- துர்மரணம் அடைந்து நற்கதி அடையாமல் இருக்கும் முன்னோர்களின் ஆன்மா சாந்தமடையும்.
- குடும்பம் மற்றும் தொழிலில் உள்ள அனைத்து விதமான தடைகளும் நீங்கும்.
- துயரங்கள் அனைத்தும் விலகும்
ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் எது?
ஜூலை 19-ம் தேதி இரவு 12.17 மணிக்கு தொடங்கும் ஆடி அமாவாசை, ஜூலை 20-ம் தேதி இரவு 11.35 மணி வரை உள்ளது.
அதனால் ஜூலை 20-ம் தேதி காலை சூரிய உதயத்திற்குப் பின் மாலை வரை தர்ப்பணம் கொடுக்க மிக சிறப்பான நேரம்.
ஆண்கள் எங்கெல்லாம் சென்று தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது?
கடல், ஆறு, குளம் முதலான நீர்நிலைகள் இருக்குமிடத்தில் தர்ப்பணம் செய்வது கூடுதல் விசேஷமானது. பலம் வாய்ந்தது. அதேபோல், அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்றும் கொடுக்கலாம்.