சபரிமலை ஆழித்தீயில் போடப்படும் நெய் தேங்காய் யாருக்காக தெரியுமா?

Report Print Kavitha in ஆன்மீகம்

சபரிமலையில் பதினெட்டாம்படியின் கீழே ஒருபுறத்தில் எரியும் ஆழித்தீயில் போடப்படும் நெய் தேங்காய் ஐயப்பனுக்கு உரியது என பலரும் கருதுகின்றனர். உண்மையிலேயே, இது ஐயப்பன் சன்னதியின் இடதுபுறமுள்ள கன்னிமேல் கணபதிக்கு உரிய வழிபாடாகும்.

சபரிமலை கோயிலில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஏற்றுதல், பாயாசம் வைத்தல், வெள்ளை நைவேத்தியம், திரிமதுரம், பஞ்சாமிர்தம், அப்பம், எள்ளுருண்டை, பழம், பானகம், இளநீர், நெய்விளக்கு, புஷ்பாஞ்சலி, சந்தனம் சார்த்துதல் ஆகியவை முக்கிய வழிபாடுகளாக உள்ளன. இவற்றில் நெய் அபிஷேகமும், கணபதிஹோமம், கற்பூர தீபம் ஆகியவை தினமும் செய்யப்படும் வழிபாடுகளாகும்.

நெய் அபிஷேகம்: சபரிமலைக்கு சென்றதும் இருமுடிகட்டைப் பிரித்து அதிலிருக்கும் நெய்தேங்காயை எடுத்துக்கொண்டு, கோயிலின் அருகில் இருக்கும் பஸ்மகுளத்தில் நீராட வேண்டும். பின்பு நெய்த் தேங்காயை உடைத்தும் ஒரு பாத்திரத்தில் நெய்ஊற்றி, அபிஷேகம் செய்ய கிளம்ப வேண்டும். நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலத்தில் பணம் கட்டி ரசீது பெற்று கோயில் வாசலுக்கு சென்று சேர்ந்தால் புரோகிதர் நெய்யை பகவானுக்கு அபிஷேகம் செய்வார். அதிலிருந்து சிறிதளவு நெய்யை பாத்திரத்தில் ஊற்றி பக்தருக்கு கொடுப்பார். அந்த நெய் ஒரு புனிதமான மருந்தாகும் என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கே கொண்டுசென்று தங்கள் பூஜை அறையில் வைத்துக்கொள்ளலாம்.

மகரபூஜை அன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள். இந்த ஒரு நாள்மட்டும்தான் காலை முதல் மதியம்வரை தொடர்ந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும். இந்த நாளில் ஏராளமானோர் அபிஷேகம் செய்ய முடியாமலே திரும்பிவிடுவர். இவர்கள் கொண்டு சென்ற நெய்யை தீவட்டி எரிப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் கொடுத்து விடுகிறார்கள். ஐயப்பன் கோயிலிலே மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். அப்பம், அரவணை ஆகியவை தயாரிக்கவும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் மிதிவரும் நெய்யை நூற்றுக்கணக்கான டின்களில் அடைத்து அதை விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள்.

கணபதி ஹோமம்: நெய் அபிஷேகம் நடத்திய பிறகு ஐயப்ப சுவாமிக்கும், நெய்த்தேங்காயின் ஒரு பகுதியை கன்னிமேல் மகா கணபதி கோயில் நடையிலிருக்கும் ஹோமத்தில் இட்டு விநாயகரை வழிபடுவார்கள். இந்த சன்னதி ஐயப்பன் சன்னதியின் இடதுபுறம் அமைந்துள்ளது. இவரை கன்னி மேல் கணபதி என அழைப்பார்கள். இதற்கு முன்பு கணபதி சிலைக்கு நேர் எதிராக இந்த அக்னி குண்டம் இருந்தது. ஆனால் ஐயப்பமார்களின் கூட்டம் அதிகரித்தபிறகு 18ம் படியின் கீழே தென்மேற்கு பாலத்தில் ஒதுக்குப்புறமாக அமைத்துவிட்டார்கள். இந்த அக்னிகுண்டம் இரவும் பகலும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கும். இதில்தான் பக்தர்கள் நெய்தேங்காயையும், கற்பூரத்தையும் வீசி செல்கின்றனர்.

முருகன் சன்னதி: கன்னிமேல் கணபதியின் இடப்பாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு காவடி வழிபாடும், வடமேற்காக உள்ள மலைப்பிரதிஷ்டைக்கு மலர்ப்பொடி மற்றும் மஞ்சள் பொடியும் வழிபாட்டுப் பொருட்கள் ஆகும்.

கற்பூர தீபம்: ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். சபரிமலை யாத்திரையின்போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபடவேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். நாம் எந்த இடத்தில் தங்கியிருக்கிறோமோ அங்கேயே கற்பூரத்தை ஏற்றலாம். கோயிலின் முன்பு அமைந்துள்ள கற்பூர தீபக்கரையிலும் விளக்கேற்றி வழிபடலாம். தற்போது கற்பூர ஆழியில் ஐயப்பன்மார் கற்பூரத்தை இட்டு வழிபடுகிறார்கள்.

- Dina Malar

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்