சபரிமலையில் மஞ்சமாதா குடியிருப்பது ஏன் தெரியுமா?

Report Print Kavitha in ஆன்மீகம்

ஐயப்பன் கோவிலுக்கு இடதுபுறம் சுமார் முன்னூறு அடி தூரத்தில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மனின் கோவில் அமைந்துள்ளது.

ஐயப்பனின் தரிசனம் முடிந்ததும் கீழே இறங்காமல் மஞ்சமாதா கோவில் செல்வதற்கு நடைமேடை அமைத்திருக்கிறார்கள்.

சபரிமலைக்கு வரும் பக்த அடியார்கள் மஞ்சமாதாவை வழிப்பட்டு செல்வது வழக்கமாகும்.

பக்தர்கள் மஞ்சமாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், அவளது திருக்கோவில் பிரகாரத்தைச் சுற்றி தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அவளது அருளைப் பெற்று வருகிறார்கள்.

மஞ்சமாதா கோவிலுக்கு வரும் சில ஐயப்ப பக்தர்கள் ரவிக்கைத் துண்டு வைத்தும், வெடிவழிபாடு செய்தும் வணங்குகிறார்கள்.

திருமணம் வேண்டிய சிலர் இரண்டு ஜாக்கெட் துண்டுகளைக் கொடுத்து, ஒன்றைத் திரும்பப் பெற்று அதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இப்படி வேண்டுதல் செய்திட அடுத்த ஆண்டிலேயே அவர்களது திருமணம் ஏற்பாடாகி இனிதே நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது.

அதைப்போல் மஞ்சமாதாவிற்கு என்று ஓர் சுவாரஸ்ய வரலாறு உள்ளது.

மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலிருந்து லீலா என்ற தேவதை போன்ற பெண்ணொருத்தி வெளிவந்து ஐயப்பனை வணங்கி ‘நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன். என் சாபம் நீங்குவதற்கு காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வரவேண்டும். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்...’ என வேண்டினாள்.

ஐயப்பன் அவளிடம் ‘நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாகச் சத்யப்பிரமாணம் செய்துள்ளேன்.’ என்று கூறி அந்த பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்து கோவிலின் இடப்புறம் மாளிகைபுறத்து அம்மன் என்ற பெயரில் அமர்ந்து இங்கே என்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஐயப்பன் கேட்டுக்கொண்டபடி, அந்த பெண் சபரிமலையில் மஞ்சமாதா என்கிற மாளிகைபுறத்தம்மனாக பரிவார தெய்வங்களுள் ஒருத்தியாக மணி மண்டபத்தின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்

சக்திகளின் ஸ்வரூபமாக குடிகொண்டு வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் என்பது பெரியோர்களின் கருத்து.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers