பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

Report Print Jayapradha in ஆன்மீகம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி தினந்தோறும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கடந்த 9-ந் தேதி மாலை கஜமுஹாசுர சம்ஹாரமும், 12-ந்தேதி மாலை தேரோட்டமும் நடைபெற்றது.

தேரோட்டம் அன்று மாலை மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று காலை 10 மணிக்கு உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் திருக்குளக்கரை எதிரே எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து திருக்குளத்தில் அங்குச தேவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க பூக்களால் அலங்கரிக்கப்பட்டு 3 முறை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.

பின்னர் மதியம் 1.30 மணிக்கு மூலவர் கற்பக விநாயகருக்கு முக்குறுணி மெகா கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது.

10-ம் நாளான இன்று காலை கோவில் எதிரே உள்ள குளத்தில் விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதன் பின்னர் கற்பக விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

இன்று இரவு 11 மணிக்கு ஐம்பெரும் தீர்த்தங்கள் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக காரைக்குடி, புதுக்கோட்டை பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் விநாயகரை தரிசிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers