வரலட்சுமி விரதம் இருப்பது எப்படி?

Report Print Jayapradha in ஆன்மீகம்

ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளப்படும் விரதம் வரலட்சுமி விரதம் ஆகும். இதனை பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ பின்பற்றுகிறார்கள்.

மேலும் இந்த விரதத்தை கடைபிடிப்பதால் லட்சுமி தேவியின் அருளுடன் எல்லா ஐஸ்வர்யங்களுடனும் வளங்களுடனும் சீரும் சிறப்புமாக வாழலாம் என்பது எல்லா பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

வரலஷ்மி விரதம் இருப்பது எப்படி?
 • விரதத்துக்கு முதல் நாள் அன்று வீட்டை சுத்தமாக கழுவி, மஞ்சள் கலந்த தண்ணீரைத் தெளித்து தூய்மையாக வைக்க வேண்டும். வீட்டின் பூஜை அறைக்குள், சுத்தப்படுத்தப்பட்ட பலகையை போட்டு, அதன் மீது மாக்கோலம் போட வேண்டும்.
 • கோலத்திற்கு நடுவில் நெல் பரப்பப்பட்ட தட்டை வைக்க வேண்டும். அந்த தட்டின் மீது நிறைகுடத்தை வைத்து, குடத்திற்கு பட்டுப்பாவாடை கட்டி, நகைகள் போட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.
 • இப்படியாக அமைக்கப்பட்ட கும்பத்திற்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து, பூச் சூட்டி, அந்த கும்பத்திற்கு முன்பாக தேங்காய், பழம், கற்கண்டு, உணவு பதார்த்தங்கள், மலர்கள் வைக்க வேண்டும். இவற்றுடன் மகாலட்சுமியின் படத்தை வைப்பது மிகவும் சிறப்பானதாகும்.
 • அதைத் தொடர்ந்து நோன்பு கயிற்றைக் கும்பத்தோடு வைத்து, ‘என் வீட்டுக்கு வந்திருக்கும் வரலட்சுமி தாயே! எப்போதும் திருமண வாழ்வு சிறப்புற்றிருக்க வரம் கொடு அன்னையே!’ என்று கூறி வேண்டியபடி நெய் விளக்கு தீபத்தை ஏற்ற வேண்டும்.
 • மேலும் வரலட்சுமி ஸ்தோத்திரங்களை கூறியபடி, தூப தீப ஆராதனைகளைச் செய்து வர லட்சுமி தாயை வழிபாடு செய்ய வேண்டும். பூஜைகள் நிறைவடைந்தவுடன், நோன்பு கயிற்றை எடுத்து கன்னிப் பெண்களின் கைகளில், சுமங்கலிப் பெண்கள் கட்டிவிட வேண்டும்.
 • சுமங்கலிப் பெண்களின் கழுத்தில் சுமங்கலிப் பெண்களே நோன்பு கயிற்றைக் கட்ட வேண்டும். தொடர்ந்து வரலட்சுமி நோன்பு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு மங்கலப் பொருட்களான மலர்ச்சரம், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை கொடுத்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும்.
 • வரலட்சுமி நோன்பை நடத்தும்போது, அக்கம் பக்கத்தில் இருக்கும் கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களை அந்த விரத பூஜையில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்க வேண்டும்.
 • வரலட்சுமி நோன்பு விரதத்தை நடத்துபவருக்கு எவ்வளவு சிறப்புகள் கிடைக்குமோ, அதேபோல் அதில் கலந்து கொள்பவர் களுக்கும் சிறப்பு வந்து சேரும்.
 • இந்த விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும்.
விரதத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரம்
 • லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி ஸஹஸ்ரநாமம் என்றும் கூறலாம்.
 • பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம் க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம் க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம் பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹர வரலக்ஷ்ம்யை நம.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers