மாங்கல்ய பலம் தரும் ஆடி அமாவாசை

Report Print Kavitha in ஆன்மீகம்

ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும்.

வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும்.

ஆடி அமாவாசையானது முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் நாளாக கருதப்படுகின்றது மற்றும் அவர்களை ஆராதித்து வழிபடும் உன்னத நன்னாள் ஆகும்.

இந்தநாளில், நதிக்கரையோரங்களிலும் குளக்கரைகளிலும் நீர்நிலைக்கு அருகிலும் தர்ப்பணம் செய்வதும் முன்னோரை வணங்குவதும் வழிபடுவதும் பன்மடங்கு பலன்களைத் வந்தடையும் என்பது ஜதீகம்.

ஆடி அமாவாசையையொட்டி ஒரு புராணக்கதையொன்று சொல்லப்படுகின்றது.

இந்தக் கதையை ஆடி அமாவாசைக்கு முந்தைய நாளில் நினைத்துக்கொண்டு அம்பிகையை வேண்டிக்கொள்ள வேண்டும் என்பார்கள்.

அழகாபுரி எனும் சிறு நகரம். இந்த ஊரை மிகுந்த அக்கறையுடன் ஆட்சி செய்து அந்த குறுநில மன்னனுக்கு, ஒரேயொரு குறை... குழந்தைச் செல்வம் இல்லையே என்பதுதான்!

எண்ணற்ற விரதங்கள் மேற்கொண்டான். சந்நியாசிகள் சொன்ன விரதங்களை சிரமேற்கொண்டு செய்தான். ஊரில் பழுத்த குடும்பஸ்தரின் விரதங்களையும் கேட்டுச் செய்தான். மந்திரிமார்களும் ஆச்சார்யர்களும் சொன்ன விரதங்களையெல்லாம் செய்தான். அவற்றின் பலனால் குழந்தை பிறந்தது.

ஊரே கொண்டாடியது. ஊரையே கூட்டிக் கொண்டாடினான். அப்போது அசரீரி ஒன்று கேட்டது. “மார்க்கண்டேயனைப் போல் உன் குழந்தைக்கும் ஆயுசு பதினாறு வயதுதான் ”என்று அசரீரி சொல்லப்பட்டது.

அரசன் ஆடிப்போனான். கலங்கித் தவித்தான். தவித்து மருகினான். தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டான். எப்போதும் வழிபடும் காளி அன்னையை நினைத்துக்கொண்டான். அருகில் உள்ள கோயிலுக்கு ஓடினான். காளி அன்னையை கண்ணீர் மல்க வணங்கினான். கண்மூடி வேண்டினான். ‘என்ன இது? நான் செய்த பாவம்தான் என்ன?’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு முறையிட்டான்.

அப்போது காளி தேவி தோன்றினாள். “அந்தக் குழந்தைக்கு ஆயுள் அவ்வளவுதான். நீட்டிப்பதற்கு வழியேதுமில்லை. ஆனால் ஒரு பரிகாரம் உள்ளது. அவனுடைய பதினாறாவது வயதில், இவன் இறந்துபோவான் அல்லவா. அப்போது இவனை எரியூட்டாதே. மிக உயர்ந்த, உன்னத குணங்கள் கொண்ட பெண்ணை இவனுக்குத் திருமணம் செய்து வனத்தில் விடுவாயாக” என அருளி மறைந்தாள்.

அப்படியே செய்கிறேன் என உறுதிபூண்டான். தேவி சொன்னதும் உறுதி பூண்டதும் ஓரளவு நிம்மதியைத் தந்தது அவனுக்கு.

காலங்கள் ஓடின. அவனுக்கு 16 வயதும் வந்தது. ஆயுளும் முடிந்தது. காளி சொன்ன பரிகாரம் நினைவுக்கு வந்தது. மகனின் உடலை சந்தனம் முதலான மூலிகைகள் நிறைந்த வாசனைத் திரவியங்கள் கொண்டு தூய்மைப்படுத்தினான். விலை உயர்ந்த பட்டாடைகள் அணிவித்தான். ஆபரணங்களை சூட்டச் சொன்னான்.

ஏழைப் பெண்ணாகவும் அனாதையாகவும் இருந்த நற்குணங்கள் கொண்ட பெண்ணை அழைத்து வந்து, அவனுக்குத் திருமணச் சடங்குகளைச் செய்தான்.

தன்னை ஏமாற்றிவிட்டதை நினைத்து கதறி அழுதாள் அந்தப் பெண். இறந்தவனை மணந்ததால், சுமங்கலியே இல்லையே நான் என்று கண்ணீர்விட்டாள். அவளின் கண்ணீரில் கரைந்த சிவபெருமான், அவள் கணவனை உயிர்ப்பித்து அருளினார். அவள் சுமங்கலித்தன்மையுடன் நீண்டநெடுங்காலம் வாழ்ந்தாள்.

இப்படியொரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.

குறிப்பு - ஆடி அமாவாசையின் போது, பித்ருக்காரியங்களைச் செய்து முடிக்கவேண்டும்.

வெல்லம் கலந்த பாயசம் நைவேத்தியம் செய்து, விநியோகித்தால், பித்ருக்களின் ஆசியும் கிடைக்கும்; மாங்கல்ய பலமும் பெருகும் என்பது ஐதீகம்!

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers