யாரிந்த அகோரிகள் - பாகம் இரண்டு

Report Print Trinity in ஆன்மீகம்
165Shares
165Shares
ibctamil.com

காசி நகரம் ஆன்மிக நாட்டம் கொண்ட மனிதர்களின் சரணாலயம். ஊருக்கொரு மயானம் இருப்பது போல உலகிற்கே ஒரு மயானமாக காசி பார்க்கப்படுகிறது. அங்கு தினமும் சராசரியாக ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகிறது.

சன்யாசிகள், யோகிகள், மாந்த்ரீகர்கள் , தாந்த்ரீகம் செய்பவர்கள் என அங்கே கூட்டம் அதிகம். அதனாலேயே பார்க்கிற மக்கள் மாந்த்ரீகர்களுக்கும் அகோரிகளுக்கும் வித்யாசம் தெரியாமல் அவர்களை பற்றி தவறாக நினைத்து கொள்கின்றனர்.

மயானத்தில் தியானம் செய்யும் அகோரிகள் எரியும் சடலங்களின் மேல் அமர்ந்து தியானம் செய்வார்கள் ஆனால் அவற்றை உண்ண மாட்டார்கள். இவர்களுக்கு உணவு தேவை என்பதே கிடையாது என்பதுதான் உண்மை. சில மூலிகைகள் பயன்படுத்தி அதன் மூலம் இவர்கள் பசியற்றவர்களாக இருக்கிறார்கள்.

ருத்திராக்ஷம் சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்றை அவர்கள் கையில் வைத்திருப்பார்கள்.

உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல.

ஆசை , பாசம், எனும் எல்லாவற்றிலும் இருந்து கடந்து பிறவி சுழற்சியிலிருந்து விடுதலை அடைந்தவர்கள் என்பதை குறிக்கும் வகையில் இவர்கள் ஆடைகள் அணிவதில்லை.

அழிக்கும் கடவுளாக கருதப்படும் சிவன் மயானத்தில் வசிப்பதாக நம்பும் அகோரிகள் தங்கள் வாழ்விடங்களை மயான பூமிக்கு அருகில் அமைத்து கொள்கிறார்கள்.

இறந்த மனிதர்களின் சாம்பல்தான் உலகிலேயே புனிதமான பொருள் என கருதுகிறார்கள். அதுமட்டுமின்றி மனிதர்களின் மண்டை ஓட்டை மாலைகளாக கோர்த்து போட்டுக் கொள்வார்கள். சிலர் மண்டை ஓட்டை பானம் பருகவும் பயன்படுத்துவார்கள்.

மோட்சத்திற்காக கங்கையில் வீசப்படும் எலும்புகளை சேகரித்து வைத்து கொள்வார்கள். புனித நபர்கள், கர்ப்பிணி பெண்கள், பாம்பினால் கடிபட்டு இறந்தவர்கள் போன்றவர்களின் சடலங்களை எரிக்க கூடாது என்பது இந்து மதத்தின் நம்பிக்கை. ஆகவே அவர்கள் உடல் கங்கையில் விடப்படும். இப்படிப்பட்ட சடலங்களை அகோரிகள் தங்கள் ஆன்ம சக்திக்கு பயன்படுத்தி கொள்வார்கள்.

கால பைரவனாகிய சிவன்தான் அத்தனைக்கும் பொறுப்பு என்பது இவர்கள் நம்பிக்கை.

ஆத்மாக்கள் அனைத்தும் உலகளாவிய எட்டு பிணைப்புகளால் மூடப்பட்டிருக்கிறது. சிற்றின்பம், பேராசை, வெறுப்பு, கோபம், மனஉறுத்தல், பயம் , பொறாமை, துரோகம் ஆகிய எட்டு பிணைப்புகளை நீக்கும்படிக்கான வழக்கங்கள்தான் அகோரிகள் பின்பற்றுகின்றனர்.

இந்த எட்டு பிணைப்புகளும் நீங்கினால் ஆன்மா சதாசிவத்துடன் இணைந்து மோட்சத்தை சேரும் என்பது இவர்களின் நம்பிக்கை.

அகோரிகளின் விந்தையான விடயங்களை பார்த்து அதனை மாயவித்தையுடன் ஒப்பிடுகின்றனர் மக்கள். ஆனால் அது உண்மையல்ல. நீண்ட காலமாக செய்து வரும் யோகாசனங்களால் அவர்களிடம் அளவுக்கு அதிகமான இயற்கைக்கு மாறான சக்திகள் உள்ளது. இருப்பினும் இவர்கள் எந்த ஒரு மாய வித்தைகளையும் செய்வதில்லை.

இவர்களின் சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்கள் யாவும் மோட்சத்தை அடைவதிலும், சிவபெருமானின் இயல்பை மனிதர்களுக்கு உணர்த்துவதிலும் அடங்கியிருக்கும்.

அகோரிகள் சிவ பெருமானையும் காளி தேவியையும் வணங்குவார்கள்.

காளி தேவி அல்லது தாரா என்பவர் தசமகா வித்யா தேவிகளில் ஒருவர். இக்கடவுள் இயற்கைக்கு மாறாக அதீத சக்திகள் கொண்ட அகோரிகளை மட்டுமே ஆசீர்வதிப்பார். தூமாவதி, ப்ரஹணமுகி மற்றும் பைரவி வடிவில் இருக்கும் இக்கடவுளை இவர்கள் வழிபடுகிறார்கள்.

மஹாகல் , வீரபத்திரர் மற்றும் பைரவர் போன்ற கடுஞ்சினத்தில் இருக்கும் சிவன் வடிவத்தை இவர்கள் வணங்குவார்கள்.

ஹிங் லெட்ஜ் மாதா தான் இவர்களுக்கு தெய்வம். அண்டம் என்பது இவரிடம்தான் இருக்கிறது என்பது இவர்கள் நம்பிக்கை.

அனைத்திலும் கடவுள் இருக்கிறார் என்பது அவர்களின் நம்பிக்கை. அகோரிகள் என்பவர்கள் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் . கடவுளை தேடி வாழ்வதில் தீவிரத்தை கடைபிடிக்கும் மிக எளிய மனிதர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

நோய்களை குணப்படுத்தும் சக்தி இவர்களுக்கு உண்டு. நோயாளிகளின் உடலில் இருக்கும் மாசுக்களை நீக்கி மீண்டும் பழைய ஆரோக்கியத்தை திருப்பி தரும் உருமாற்ற சக்தி இவர்களுக்கு இருக்கிறது.

இதற்கும் மாயவித்தைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அகோரிகளின் உயரிய நிலையிலான மனம் மற்றும் உடலே அவர்களுக்கு இவ்வளவு சக்தியை அளித்துள்ளது.

ஆகவே அகோரிகள் என்பவர்களை சரியாக புரிந்து கொண்டு அவர்களின் ஆசியை பெறும் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்