வலம்புரி சங்கை வீட்டில் வைப்பதால் ஏற்படும் நன்மைகள்

Report Print Athavan in ஆன்மீகம்

மகிழ்ச்சியான எந்த குறையும் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைபடுபவர்களுக்கு செல்வங்களை அள்ளி தரும் ஒரு பொருள் தான் சங்கு...!

ஒருவர் இழந்த மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை திரும்ப பெற வலம்புரி சங்கினை வீட்டில் வைக்கவேண்டுமென சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்த சங்கினை வீட்டில் வைப்பது மற்றும் எப்படி வழிபட வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

வலம்புரி சங்கு

சங்கின் வாய்ப்பகுதியில் ஆரம்பித்து சங்கின் சுருள் அமைப்பு, வலப்புறமாக சுற்றி, சங்கின் அடிப்பகுதியில் முடியும் வகையிலான சங்கே, வலம்புரி சங்கு எனப்படுகிறது

வலம்புரி சங்கினை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வலம்புரி சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜை செய்தும் வழிபட வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும்.

கணவன் மனைவி பந்தம் மற்றும் ஆரோக்கியம்

சித்ரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால், கணவன்- மனைவி நல்ல ஆயுளுடன் வாழ்வார்கள்.

தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதனை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்

புத்திர மற்றும் சந்தான பாக்கியம்

பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன்- மனைவிக்கு புத்திர பாக்கியம் கிட்டுமாம்.

சந்தான பாக்கியம் கிடைப்பது தாமதமாகும் காரணத்தால் மனம் கலங்கி நிற்கும் தம்பதிகளின் மனக்கவலை விலக அவர்கள் பஞ்சமி திதிகளில் காலையிலும், மாலையிலும் வலம்புரிச் சங்கில் சிறிது தேன் கலந்த பசும்பாலை வைத்து குருவின் ஸ்துதியை 48 முறை உச்சரித்து, அந்தத் தேன் கலந்த பசும்பாலை கணவன், மனைவி இருவரும் பிரசாதமாக அருந்தி வந்தால் எண்ணிய எண்ணம் ஈடேறி மனக்குறைகள் யாவுமே மாயமாய் மறைந்து விடும்.

பிரம்மஹத்தி தோசம் மற்றும் செவ்வாய் தோசம்

தினமும் வலம்புரி சங்கினை பூஜித்து வந்தால் பிரம்மஹத்தி தோஷம் எனப்படும் கடுமையான தோஷம் நீங்கி விடும் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அமையப் பெற்றவர்கள் அந்த தோஷத்தின் வலிமை நிலைகளுக்கேற்றவாறு வலம்புரிச் சங்கு பூஜையைக் குறிப்பிட்ட காலத்திற்குச் செய்து வந்தால் தோஷ நிவர்த்தி அடையும்.

பெரும் புண்ணியம்

சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். வளர்பிறை நாளில் வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால், அதில் நீராட்டி சுத்தம் செய்யவேண்டும்.

இல்லாவிட்டால், மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.

சங்கிற்கான மந்திரம்

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே

பவமானாய தீமஹி

தன்னஸ் சங்க ப்ரஜோதயாத்

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்