அன்னத்தின் பெருமையை உணர்த்தும் வேதங்கள்!

Report Print Kavitha in ஆன்மீகம்
77Shares

அன்னத்தின் பெருமையை வேதம் முதலாக அனைத்து நூல்களும் போற்றி விவரிக்கின்றன.

அன்னத்தைப் பற்றித் வேதங்கள் சொல்வதைப் பார்க்கலாம்.

  1. அன்னத்தை இகழாதே!
  2. அன்னத்தை அவமதிக்காதே!
  3. அன்னத்தை ஏராளமாக உற்பத்தி செய்!
  4. அன்னத்தை அடுத்தவர்க்குக் கொடுத்து உண்!

இவையெல்லாம் அன்னத்தைப் பற்றி வேதங்கள் சொன்னவை.

அன்னத்தை இகழாதே

உண்ண உட்காரும்போதே, ‘இந்த உணவு நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கட்டும்’ என்ற எண்ணத்தோடு உட்கார வேண்டும். அதை விடுத்து, ‘எப்பப் பாத்தாலும் இதே சோறு, ரசம், குழம்பு. சே! வெரைட்டியா செஞ்சு தொலைக்கக் கூடாதா?’ எனச் சொல்லக்கூடாது.

இதை மற்றொரு விதமாகப் பார்த்தால், ‘நமக்குப் பிடித்ததை நாம் உண்கிறோம். அடுத்தவர்க்குப் பிடித்ததை அவர்கள் உண்கிறார்கள்,’ என்று இருக்க வேண்டுமே தவிர, அடுத்தவர்கள் உண்பதை இகழக்கூடாது.

அன்னத்தை அவமதிக்காதே

சிலர் தம் வீடுகளில் தட்டில் ஏராளமான உணவிருக்க, அதன் மேலேயே கைகளைக் கழுவி, அப்படியே எழுந்திருக்கும் அவலத்தைக் காணலாம். நம்மைத் தேடிவரும் பெரிய மனிதர்களை அலட்சியப்படுத்துவது தவறு. மறுபடியும் அவர்கள் நம் வீட்டுப்பக்கம் வரமாட்டார்கள்.

அதுபோல, அன்னம் என்பது மிக மிக முக்கியமானது. எத்தனையோ பேர் ஒருவேளை சோற்றுக்குக்கூட வழி இல்லாமல் இருக்கும்போது, நமக்கு இது கிடைத்ததே என்று உண்ண வேண்டுமே தவிர, உயிர் காக்கும் அந்த உணவிலேயே கை கழுவுவது மிகப் பெரும் பாவம்.

அவமானப்படுத்தப்பட்ட முக்கியஸ்தர்கள், மறுபடியும் நம்மை நெருங்காததைப் போல, நம்மால் அவமானப்படுத்தப்பட்ட உணவு, மறுபடியும் நம்மை நெருங்காமலே போய் விடக்கூடும். ஆகவே எந்தவொரு விதத்திலும் அன்னத்தை அவமானப்படுத்தக் கூடாது.

அன்னத்தை ஏராளமாக உற்பத்தி செய்

மின்சாரத்தின் அவசியத்தைச் சொல்லும்போது, ‘தேவையில்லாதபோது மின் சாதனங்களை அணைத்து விடுங்கள், வீணாக விளக்குகளை எரிய விடாதீர்கள், இதுவே மின் உற்பத்திக்குச் சமம்’ எனும் அறிவிப்பைப் பார்த்திருக்கலாம். உணவில்லாமல் ஒருக்காலும் வாழமுடியாது.

அப்படிப்பட்ட உணவை நமக்களிக்கும் விவசாயிகளுக்கு நாம் ஏதேனும் பாராட்டு விழா நடத்துகிறோமா? ஆகையால் அன்னத்தை ஏராளமாக உற்பத்தி செய் என்பது, அதை உற்பத்தி செய்பவர்களை ஆதரி என்ற பொருளையும் தரும்.

அன்னத்தை அடுத்தவர்க்குக் கொடுத்து உண்

‘உண்ணும் போது ஒரு கைப்பிடி’ என்று திருமூலர் ஏற்கனவே கூறியிருக்கிறார். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என மணிமேகலை காப்பியம் கூறுகிறது. நம் வழிபாட்டு முறைகள் அனைத்திலும், வழிபாட்டின் முடிவில் அன்னதானத்தை விசேஷமாகக் குறிப்பிடுவார்கள். ‘அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா’ என்று இறைவனையும் அன்னதானப் பிரபுவாகவேப் போற்றி மகிழ்கிறோம்.

இயன்றவரை அடுத்தவர்க்குக் கொடுத்து உண்பது மிகவும் சிறந்தது. இவ்வாறு கொடுப்பதில் உள்ள உயர்வைப் பற்றி திருமூலர் விவரிக்கிறார். பசியுடன் வந்தவர்களுக்கு கொடுக்கப்படும் உணவை, தெய்வமே வந்து ‘ஆகா, இது அமுதம்!’ என்று ஏற்றுக் கொள்கிறதாம். அதாவது, ஏழையர்க்குப் படைக்கப்படும் உணவு இறைவனுக்கே படைக்கப்பட்டதாகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்