உயிர்பெற்றெழுந்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றுதல் பற்றிய புதிய ஏற்பாட்டு செய்தி

Report Print Printha in ஆன்மீகம்

இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையாய் இருந்ததும், இயேசு உயிர்பெற்றெழுந்ததும் அவர் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும்.

இயேசு தம் சீடருக்குப் பல முறை காட்சியளித்ததாக நற்செய்தி நூல்களும் திருத்தூதர் பணிகள் நூலும் தெரிவிக்கின்றன.

உயிர்பெற்றெழுந்த இயேசு மேல்மாடியில் கூடியிருந்த தம் சீடர்களுக்குத் தோன்றினார்; அப்போது சீடர் தோமா அங்கே இல்லை.

உயிர்பெற்றெழுந்த இயேசுவைத் தம் கைகளால் தொட்டுப்பார்த்தாலொழிய நம்பப்போவதில்லை என்று கூறிவிட்டார். எட்டு நாள்களுக்குப் பின் இயேசு மீண்டும் தோன்றியபோது தோமாவும் கூட இருந்தார்.

இயேசு சீடர்களை நோக்கி வழக்கம்போல, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்திய பிறகு, தோமாவை நோக்கி, "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு.

உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார்.

இயேசுவைத் தம் கையால் தொடுவதற்குத் தோமாவுக்குத் துணிவு வரவில்லை.

மாறாக, தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்று கூறிப் பணிந்தார்.

இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார் (காண்க: யோவான் 20:24-29).

எம்மாவு என்னும் ஊருக்குச் சென்றுகொண்டிருந்த சீடர்களுக்கு இயேசு தோன்றிய செய்தியை லூக்கா குறித்துள்ளார் (காண்க: லூக்கா 24:13-32).

திபேரியக் கடல் (கலிலேயாக் கடல்/ஏரி) அருகே சீமோன் பேதுருவும் பிற சீடரும் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இயேசு அவர்களுக்குத் தோன்றி அவர்களை உறுதிப்படுத்தினார் (காண்க: யோவான் 21:1-23).

இயேசு இறுதி முறையாகத் தோன்றியது அவர் உயிர்பெற்றெழுந்த நாற்பதாம் நாள் எனவும் அப்போது அவர் விண்ணேகினார் எனவும் லூக்கா குறித்துள்ளார் (காண்க: லூக்கா 24:44-49).

கிறித்தவர்களைத் துன்புறுத்திய சவுல் என்பவருக்கு இயேசு தோன்றியதும், சவுல் மனமாற்றம் அடைந்து, பவுல் என்னும் புதிய பெயரோடு இயேசுவின் தீவிர சீடராக மாறியதும் திருத்தூதர் பணிகள் நூலிலும் பவுல் எழுதிய மடல்களிலும் குறிக்கப்பட்டுள்ளன.

இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைக் கிறித்தவர்கள் தம் சமய நம்பிக்கையின் மையமாகக் கருதுகிறார்கள்.

கடவுள் பெயரால் இவ்வுலகிற்கு வந்து, மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்கள் விண்ணக வாழ்வில் பங்கேற்க எத்தகைய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இயேசு தம் சொல்லாலும் செயலாலும் காட்டினார்.

சாவின்மீது தாம் வெற்றிகொண்டதுபோலவே தம்மை நம்பி ஏற்போர் அனைவரும் அவ்வெற்றியில் பங்கேற்பர் என இயேசு அறிவுறுத்தினார்.

புத்துயிர் பெற்ற இயேசு மனித வரலாற்றில் கடவுளின் வல்லமையாக இருந்து அவ்வரலாற்றை வழிநடத்துகிறார் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள்.

இயேசுவை மீட்பராக ஏற்போர் கடவுளின் அன்பிலும் அரவணைப்பிலும் எந்நாளும் வாழ்வர் என்பது கிறித்தவ நம்பிக்கை.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments