தாய்லாந்தில் தீவிரமடையும் போராட்டம்! இணைய வழி அலைவரிசைகளை முடக்கியது அரசு

Report Print Karthi in தெற்காசியா
41Shares

தாய்லாந்தில் முடியாட்சிக்கு எதிராக தொடர்ந்து வரும் போராட்டங்கள் தற்போது அடுத்த கட்டத்தினை எட்டியுள்ளன. இந்நிலையில் அந்நாட்டு அரசு இணையவழி தொலைக்காட்சி அலைவரிசைகளை முடக்கியுள்ளது.

2020 காலகட்டங்களிலும் சர்வதேச அளவில் பிரித்தானியா, தாய்லாந்து போன்ற சில நாடுகளில் மட்டுமே முடியாட்சி முறை அமலில் உள்ளது. இந்நிலையில் அரசு சார்பில் தொடர்ந்து பின்பற்றப்படும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து தாய் மக்கள் பெருமளவில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முடியாட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என போராடிய மூன்று முக்கிய போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மூன்று விரல் சல்யூட் மூலமாக அரசுக்கு போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசு அறிவித்திருந்த அவசர நிலைக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பாங்காங் வீதிகளில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக மூன்று விரல்களை உயர்த்தி, தேசிய கீதத்தினை பாடியுள்ளனர்.

அதிகரித்து வரும் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் தாய்லாந்து நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தொடருக்கு பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பிரதமர் பதவி விலக மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மக்களும், மாணவர்களும் தற்போதைய பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், முடியாட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் தொடர் போராட்டங்களில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பல தலைவர்கள் கைது செய்யப்பட்டபோதும், இது தலைமையற்ற போராட்டம் என்றும், நாங்கள் ஒவ்வொருவரும் தலைவர்தான் என்றும் போராட்டக்காரர்கள் கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்