50 பேரே மொத்த மக்கள் தொகை... 10 பேருக்கு கொரோனா: வெளிவரும் கலங்கடிக்கும் தகவல்

Report Print Arbin Arbin in தெற்காசியா
369Shares

அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் 50 பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட பழங்குடியின மக்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தமான் தீவுக்கூட்டங்களில் வசித்துவரும் பழங்குடியினங்களில் கிரேட்டர் அந்தமான் பழங்குடியின மக்களும் ஒன்று.

அந்தமான் நிகோபார் தீவுக்கூட்டங்களில் ஸ்டிரிட் என்ற தீவில் இந்த பழங்குடிகள் வசித்து வருகின்றனர்.

பிரித்தானியர்களின் வருகைக்கு முன்னர் 5 ஆயிரம் கிரேட்டர் அந்தமான் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர். பிரித்தானியர்கள் இவர்கள் வசித்த ஸ்டிரிட் தீவை ஆக்கிரமிக்க வந்தபோது நடந்த சண்டையில் பழங்குடியினர் பலர் கொல்லப்பட்டனர்.

தற்போது கிரேட்டர் அந்தமான் பழங்குடியினரின் மொத்த எண்ணிக்கை 50 என்ற மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது.

இந்த பழங்குடியினத்தை பாதுகாக்கும் வகையில் இவர்களை பாதுகாக்கப்பட்ட இனமாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது இந்த பழங்குடியினரில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினரில் சிலர் அரசு பணியில் இருப்பதால் அவர்கள் போர்ட் பிளேயரில் உள்ள அரசு அலுவலகம் வந்து தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களிடம் முதலில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் பழங்குடியினர் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, ஸ்டிரிட் தீவில் வாழ்ந்து வரும் கிரேட்டர் அந்தமான் பழங்குடியினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் மேலும் 4 பழங்குடியினருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் போர்ட் பிளேயரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

சிகிச்சை பெற்றவர்களில் 6 பேர் குணமடைந்ததையடுத்து அவர்கள் தீவுக்கு அழைத்து வரப்பட்டு வீட்டுத்தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 4 பழங்குடியினர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்