திருமணமான 3 நாட்களில் சோர்வுடன் தூங்கி எழுந்த புதுமாப்பிள்ளை! அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் கணவர் மற்றும் குடும்பத்தாரை மயக்கமடைய செய்து வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் அசம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம். இவர் மகன் பிரவீன். பிரவீனுக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று முன் தினம் பிரவீன் தனது மனைவியுடன் தனது வீட்டுக்கு வந்தார். அவருடன் திருமணத்துக்கு பிரவீனுக்கு பெண் பார்த்து கொடுத்த தரகர் டிங்கு என்பவரும் வந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பிரவீன் மனைவி, கணவருக்கும் குடும்பத்தாருக்கும் உணவு கொடுத்தார். உணவை சாப்பிட்ட அனைவரும் சிறிது நேரத்தில் அப்படியே தூங்கிவிட்டனர்.

காலையில் பிரவீன் மற்றும் குடும்பத்தார் மயக்கமான நிலையோடு மிகுந்த சோர்வுடன் எழுந்த போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், பிரவீன் மனைவி மற்றும் தரகர் டிங்கு மாயமாகியதோடு வீட்டிலிருந்த பணம், நகைகள் மற்றும் விலை மதிப்பிலான பொருட்களும் மாயமாகியிருந்தது.

அப்போது தான் மனைவி தன்னை ஏமாற்றிவிட்டு ஓட்டம் பிடித்ததை பிரவீன் உணர்ந்தார்.

இது குறித்து பிரவீன் கூறுகையில், என் மனைவி ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என தரகர் கூறியதால் ரூ 4 லட்சம் செலவழித்து திருமணம் செய்து கொண்டேன்.

இதோடு அவள் நகை செய்து கொள்வதற்காகவும் தரகரிடம் பணம் கொடுத்திருந்தேன்.

என்னை அவள் இப்படி ஏமாற்றுவாள் என கனவிலும் நான் நினைக்கவில்லை, மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளோம்.

இது தொடர்பாக் பொலிசில் புகார் அளித்துள்ளோம், நிச்சயம் என் மனைவியையும் தரகர் டிங்குவையும் கைது செய்ய வேண்டும் என கூறினார்.

பொலிசார் கூறுகையில், புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம், விரைவில் இருவரையும் பிடிப்போம் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்