தங்களுக்குள்ளேயே 23 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற குடும்பம்.. அம்பலமான உண்மை!

Report Print Kabilan in தெற்காசியா
119Shares

சீனாவில் அரசு வழங்கும் இலவச வீடுகளைப் பெற, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள்ளேயே மாறி மாறி திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றது அம்பலமாகியுள்ளது.

கிழக்கு சீனாவின் ஸேஜியாங் மாகாணத்தில் இருக்கும் லிஷூய் என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தின் மேம்பாட்டுப் பணிக்காக, சீன அரசு அங்குள்ள மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தருகிறது.

அந்த மக்கள் ஏற்கனவே இருக்கும் இடத்தை அரசு எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக 40 சதுர மீற்றர் அளவிலான வீடுகளை இலவசமாக வழங்கி வருகிறது.

அத்துடன் சொந்த நிலம் இல்லாதவர்களும் இலவச வீடுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சீன அரசு அறிவித்துள்ளது. இதனை அறிந்த பான் என்ற நபர், பல வீடுகளை இலவசமாக பெற திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக, விவாகரத்து செய்த தனது மனைவி ஷியை மீண்டும் திருமணம் செய்த பான், அதற்கான சான்றிதழையும் பெற்றார். பின்னர் அதனை அரசிடம் காட்டி இலவச வீட்டில் வாழ தகுதி பெற்றுள்ளார்.

அதன் பின்னர் ஷியை விவாகரத்து செய்த பான், தனது அண்ணியை திருமணம் செய்துகொண்டு மற்றொரு வீட்டினை பெற்றார். பின் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு, அண்ணியின் தங்கையை திருமணம் செய்து மூன்றாவது வீட்டினை பெற்றுவிட்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

இதேபோல், பானின் மனைவி ஷியும் தன் முன்னாள் கணவரைத் திருமணம் செய்து வீடு பெற்றுள்ளார். பானின் தந்தையும் இரண்டு, மூன்று திருமணங்கள் செய்து வீடு பெற்றுள்ளார்.

இவ்வாறாக இரண்டே வாரத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 11 பேர், தங்களுக்குள்ளேயே 23 முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்று 11 வீடுகளை பெற்றுள்ளனர். இந்த மோசடி சீன ஊடகங்களில் செய்தியாக வெளியானது.

இதனை அறிந்த கிராம மேம்பாட்டு அதிகாரிகள், பான் குடும்பத்தினரின் மோசடி தொடர்பாக பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதன்மூலம் இவர்களின் மோசடி அம்பலமானது.

அதனைத் தொடர்ந்து பான் குடும்ப உறுப்பினர்கள் 11 பேரை கைது செய்த பொலிசார், அவர்களை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த மோசடிக்கு முக்கிய காரணமாக இருந்த 4 பேரைத் தவிர, மற்ற அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று அந்த கிராமத்தில் உள்ள மற்றவர்களும் மோசடி செய்துள்ளார்களா என்ற விசாரணையில் சீன அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்