2 பெண் பிள்ளைகளுக்கு தந்தை... வெளிநாட்டில் இறந்த தமிழர்: உடலை கேட்டு பரிதவிக்கும் குடும்பம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிக் நாட்டில் மர்மமான முறையில் இறந்த கணவரின் சடலத்தை மீட்க வலியுறுத்தி அவரது மனைவி காவல்துறையை நாடியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழகத்தின் ஈரோடு அருகே நாதகவுண்டம் பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவரே ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிக் நாட்டில் மர்மமான முறையில் இறந்தவர்.

இவரது மனைவி தீபா, தற்போது தமது கணவரின் சடலத்தை மீட்டுத் தர வலியுறுத்தி காவல்துறையை நாடியுள்ளார்.

இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான செந்தில் ஆழ்துளை கிணறு தொடர்பான பணியில் இருந்து கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் வெளிநாடு சென்றால் கை நிறைய சம்பாதிக்கலாம் என அவரது நண்பர்கள் மற்றும் உறவினர் கூறவே,

இது தொடர்பில் அவர் சென்னையில் உள்ள நிறுவனங்களை விசாரித்துள்ளார். இதனையடுத்து சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் மதுரை ராஜேந்திரன் ஆகியோர் மொசாம்பிக் நாட்டில் உள்ள தங்களது நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினால் மாதம் ஒரு லட்சம் சம்பளம் பெற்றுத் தரலாம் எனவும் கூறியுள்ளனர்.

இதனை நம்பி கடந்த நவம்பர் மாதம் மொசாம்பிக் நாட்டுக்கு சென்றுள்ளார் செந்தில்.

இதன் அடுத்த மாதம் ரூ.50,000 வீட்டுக்கு அனுப்பிய செந்தில், அதன் பிறகு தனது முதலாளி பணம் கொடுக்க மறுக்கிறார் என தனது மனைவி தீபாவிடம் தொலைபேசியில் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து செந்திலை மொசாம்பிக் நாட்டுக்கு அனுப்பிய நிறுவனத்திடம் தீபா மற்றும் குடும்பத்தினர் கண்ணீருடன் பேச, அதன் பிறகு கொஞ்சம் பணம் அனுப்பியிருக்கிறார்கள்.

இதனிடையே, செந்தில் தாம் சொந்த ஊருக்கே சென்று விடுகிறேன் எனவும் தமது சம்பளத்தை தந்து விடுங்கள் என கெஞ்சியும், அவர்கள் விடவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென செந்தில் இறந்து விட்டதாக அவரது மனைவிக்கு தொலைபேசி மூலம் தகவல் கூறியிருக்கிறார்கள்.

இந்த தகவலால் அதிர்ச்சியடைந்த தீபா, தமது கணவர் எப்படி இறந்தார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? எங்களுக்கு நீதி வேண்டும், உரிய விசாரணை நடத்தப்படவேண்டும்,

இறந்த எனது கணவர் உடலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளரிடம் மனு கொடுத்து முறையிட்டுள்ளார்.

குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டுக்கு பிழைக்கசென்ற இளைஞரின் குடும்பத்திற்கு நிரந்தரமாகவே கஷ்டத்தை கொடுத்துள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்