ஆசிரியர் மோசமாக தாக்கியதில் மாணவர் உயிரிழப்பு.. ஆத்திரத்தில் பள்ளியைக் கொளுத்திய மாணவர்கள்!

Report Print Kabilan in தெற்காசியா

பாகிஸ்தானில் உள்ள பள்ளி ஒன்றில், ஆசிரியர் தாக்கியதில் மாணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சக பள்ளி மாணவர்கள் பள்ளியை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஹாஃபிஸ் ஹுனாயின் பிலால் என்ற மாணவர் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த வியாழக்கிழமை அன்று, அவரது ஆசிரியர் முகமது காம்ரான் என்பவர் ஹூனாயின் பிலால் பாடத்தை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை என்று கூறி, மாணவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

பிலாலை சுவற்றில் பலமுறை மோதி மோசமாக காயப்படுத்தியுள்ளார் ஆசிரியர் முகமது காம்ரான். இதனால் நிலைகுலைந்து விழுந்த பிலால் பேச்சு மூச்சு இன்றி கிடந்துள்ளார். அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் பாதி வழியிலேயே ஹுனாயின் பிலால் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தினால் பள்ளி மாணவர்கள் கொந்தளிப்படைந்தனர். அதன் பின்னர் ஆசிரியருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், ஒரு கட்டத்தில் பள்ளிக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதில் பள்ளி முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், சில மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் உயிரிழந்த மாணவரின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் காம்ரான் மீது வழக்குப்பதிவு செய்து பள்ளியின் முதல்வரையும் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்