மனைவியை மாமியார் வீட்டிற்கு நம்பி அனுப்பி வைத்த கணவன்... அதன் பின் பார்க்க சென்று அவருக்கு நேர்ந்த கதி

Report Print Santhan in தெற்காசியா

இந்தியாவில் மாமியார் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட மனைவியைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாததால், அங்கு சென்ற கணவன் பொலிசார் முன்பே கொடூரமாக கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், குட்ச் மாவட்டம், காந்திதம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரேஷ் குமார் சோலங்கி. 25 வயதான இவர் அகமதாபாத்தில் உள்ள ஊர்மிளா ஜலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் சோலங்கி, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருவரின் காதலுக்கும் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

திருமணத்துக்குப் பிறகு இருவரும் சோலங்கியின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊர்மிளாவின் உறவினர்கள் அவரை சந்தித்து சில நாள்கள் தங்கள் வீட்டில், அதாவது அவருடைய தாய் வீட்டில் வந்து தங்கும் படி அழைப்பு விடுத்துள்ளனர்.

தாய் வீட்டிற்கு செல்ல விரும்பாத அவரை, உறவினர்கள் சில நாட்கள் மட்டும் தானே, அதன் பின் நாங்களே உன்னை இங்கு வந்து ஒப்படைத்துவிடுகிறோம் என்று கூற, கணவர் சோலாங்கியும் அனுப்பி வைத்துள்ளார்.

தாய் வீட்டிற்கு சென்ற மனைவி, இரண்டு மாதங்களாக பேசாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அவர் மனைவியை பார்ப்பதற்கு முயற்சி செய்துள்ளார், ஆனால் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.

இதனால் சோலாங்கி சமீபத்தில் குஜராத் பெண்கள் பாதுகாப்பு காவலருக்கு போன் செய்து தன் மனைவி பற்றிய விவரங்களையும் அவரை வெளியில் விடாமல் பெற்றோர்கள் அடைத்து வைத்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மனைவியான ஊர்மிளாவின் வீட்டிற்கு பொலிசார் மற்றும் வழக்கறிஞருடன் சோலாங்கி சென்ற போது, அங்கிருந்த உறவினர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

பொலிசார் வீட்டின் உள்ளே ஊர்மிளா இருக்கிறாரா என்பதை பார்க்க சென்ற இடைவெளியில் இந்த செயலை செய்துள்ளார். அதன் பின் பொலிசார் வந்து அவரை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் சரமாரியாக குத்த காவலர்கள் கண்முன்பே சோலங்கி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதில் காவலர்களின் வாகனம் பலத்த சேதமடைந்ததோடு காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த அனைத்துச் சம்பவங்களும் நடந்து முடியும் வரை ஊர்மிளா அந்த இடத்தில் இல்லை எனக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். அவரை எங்கேயோ கடத்தி வைத்திருப்பதாகவும் காவலர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

சோலங்கி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஊர்மிளாவின் தந்தை தசரத்சிங் ஸாலா மற்றும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது, அதிகாரிகளை காயப்படுத்தியது போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்