வரதட்சணை விவகாரம்: விருந்துக்கு வந்த மாமனாரை அதிரவைத்த மருமகன்!

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் விருந்துக்கு வந்த மாமனாரை மருமகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சுல்தான்பூர்பட்டியைச் சேர்ந்த ரயீஸ் அகமது தமது மகள் ருஹ்ஷரை அதே பகுதியில் உள்ள இக்ரம் என்பவருக்கு சமீபத்தில் திருமணம் செய்துகொடுத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வரதட்சணை தொடர்பாக இக்ரம் குடும்பத்தினருக்கும் ருஹ்ஷருக்கும் பிரச்னை எழுந்துள்ளது.

இக்ரமின் சகோதரிகள் வரதட்சணை தொடர்பாக தொடர்ந்து பிரச்னை எழுப்ப, இது இக்ரம் தம்பதிக்கு இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. தகராறு நீடிக்கவே ருஹ்ஷர் இந்த விவகாரம் தொடர்பில் தமது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரயீஸ் அகமது கிராம பஞ்சாயத்தைக் கூட்டி தமது மகளின் வரதட்சணை பிரச்னைக்கு முடிவு கட்டியுள்ளார்.

பஞ்சாயத்தில் இருவரையும் தனிக் குடித்தனம் வைக்க முடிவெடுத்து அதன்படி இருவரும் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், தனிக்குடித்தனம் சென்ற பின்னர் முதன் முறையாக தமது மாமனார் குடும்பத்தை விருந்துக்கு அழைத்துள்ளார் இக்ரம்.

அதன்படி குடும்பத்துடன் விருந்துக்கு வந்துள்ளார் ரயீஸ். வந்த இடத்தில் மீண்டும் வரதட்சணை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாமனாரும் மருமகனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த இக்ரம் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மாமனார் ரயீஸை சுட்டுள்ளார்.

சுட்டது மட்டுமல்லாமல் பொலிசாருக்கு தகவல் தெரிவித்து மாமனாரைச் சுட்ட தகவலையும் சொல்லியுள்ளார்.

தகவல் அறிந்து வந்த பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்