மக்கள் பணத்தை பதுக்கி வைத்துக்கொண்டால் எப்படி நாடு முன்னேறும்? கொந்தளிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

Report Print Kabilan in தெற்காசியா

பாகிஸ்தான் மக்கள் பணத்தை பதுக்கி வைத்துக் கொண்டால், நாட்டை எப்படி முன்னேற்ற முடியும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்ற பிறகு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, நாட்டின் பொருளாதாரம் குறித்து அதிகம் சிந்திக்கும் அவர், சிக்கனக் கொள்கையை கையில் எடுத்தார்.

இந்நிலையில், அந்நாட்டில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால், நாட்டு மக்களுக்கு பிரதமர் இம்ரான் கான் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘நாட்டு மக்கள் தங்கள் சொத்துக் கணக்கை ஜூன் 30ஆம் திகதிக்குள் வெளியிட வேண்டும்.

வங்கியில் வைத்துள்ள பணம், பினாமி பெயர்களில் உள்ள சொத்துக்கள், வெளிநாட்டு வங்கிகளில் வைத்துள்ள பணம் என அனைத்தையும் தெரிவிக்க வேண்டும். நாம் வரிகட்டவில்லை என்றால், நமது நாட்டை நாம் முன்னேற்ற முடியாது. ஜூன் 30ஆம் திகதிக்கு பிறகு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கிறது.

அதன் பிறகு கடுமையான நடவடிக்கைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். பினாமி பெயர்களில் சொத்துக்கள் பதுக்கி வைத்திருப்பவர்களின் விவரங்களை, அரசு ஏற்கனவே திரட்டியுள்ளது. பதுக்கி வைத்துள்ளவர்கள் முன்கூட்டியே தெரிவித்து அதற்குரிய வரியை செலுத்தி விட்டால்,அவர்கள் மட்டுமின்றி அவர்களது சந்ததியினரின் எதிர்காலத்துக்கும் நல்லது’ என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வெறும் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூட வரி வசூல் ஆவதில்லை.

பிறகு எப்படி கடனை கட்ட முடியும். அன்றாட செலவுக்கே பணம் இல்லையென்றால் எப்படி அரசை வழிநடத்த முடியும். பணம் எல்லாம் மறைத்து வைக்கப்பட்டால் செலவு செய்வதற்கு அரசு பணத்துக்கு எங்கே போகும்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்