மனைவியை தவிக்கவிட்டு வெளிநாட்டில் உல்லாசமாக வாழ முடியாது: வருகிறது புதிய சட்டம்

Report Print Deepthi Deepthi in தெற்காசியா

வெளிநாடுளில் வசிக்கும் இந்தியர்கள் பலர் இந்தியாவில் திருமணம் செய்துவிட்டு அவர்களை கைவிட்டுவிட்டு செல்லும் சம்பவங்கள் தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் நடந்து வருகின்றன.

இந்தியாவில் மனைவியை விட்டு விட்டு அவர்களை விவாகரத்து செய்யாமல் தாங்கள் வாழும் நாட்டில் வேறு பெண்ணுடன் அவர்கள் சேர்ந்து வாழ்கின்றனர்.

இந்த விவரம் தெரியாமல் கணவன் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் பல ஆண்டுகளை பெண்கள் கழித்துவிடும் சூழல் உள்ளது.

இந்த முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மனைவியை கைவிட்டுவிட்டு, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும். இதுபோன்ற புகாருக்கு ஆளாகுபவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்படும்.

அவர்கள் சார்ந்த மாநில பொலிசாரால் நோட்டீஸ் வெளியிடப்பட்டு அதன் விவரம் அவர்கள் வசிக்கும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவை அனைத்தையும்விட, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கும் நாட்டின் உள்ள இந்திய தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய தூதரகம் சார்பில் அந்த நாட்டு அதிகாரிகள், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers