பாகிஸ்தானில் நாள்பட்ட கல்லீரல் நோயால் பானை போன்று வீங்கிய வயிறுடன் அவதிப்பட்டுவரும் 9 வயது சிறுவனின் நிலை காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் பெற்றோருடன் குடியிருந்து வருபவர் அனீத் உர் ரஹ்மான். பானை போன்று வீங்கிய இவரது வயிறை மெதுவாக தொட்டால் கூட உயிர் பிரியும் வலியை அனுபவித்து வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
நாள்பட்ட கல்லீரல் நோயால் அவதிக்கு உள்ளாகியிருக்கும் சிறுவனின் அறுவை சிகிச்சைக்காக சுமார் 35,000 பவுண்டுகள் தேவை எனவும், ஆனால் அத்தனை பெரிய தொகையை தங்களால் செலவிட முடியாது எனவும் கண்கலங்கியுள்ளனர்.
அனீத் அவனது எஞ்சிய 6 சகோதரர்கள் போன்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் வரை மிகவும் சாதாரண சிறுவனாக இருந்துள்ளார்.
ஆனால் தமக்கு அடிவயிறு வலிப்பதாக அடிக்கடி பெற்றோரிடம் புகார் அளித்தும் வந்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து அவனது வயிறு சிறிது சிறிதாக வீங்கவும் தொடங்கியுள்ளது. கடந்த ஓராண்டாகவே பானை போன்று வீக்கம் கண்டுள்ளது.
தற்போது அனீத்தால் நடக்கவோ, சரியாக தூங்கவோ முடியாமல் தவித்து வருகிறான். மேலும், அவனுக்கு ஏற்ற உடைகைளை தெரிவு செய்வதும் தற்போது மிகுந்த சிரமத்தை அளித்துள்ளது.
நடக்கவே முடியாத காரணத்தால் தற்போது பாடசாலை போவதை நிறுத்தியுள்ள அனீத், பெரும்பாலும் நேரம் குடியிருப்பிலேயே இருந்து வருகிறான்.
சவுதி அரேபியாவில் கூலித் தொழில் செய்து வந்த அனீத்தின் தந்தை, மகனின் நிலை கண்டு கடந்த 6 மாதம் முன்னர், வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
மருத்துவர்கள் பலரை அணுகியும், எவருமே உண்மையான காரணத்தை தெரிவிக்கவில்லை என கூறும் அவர், சமீபத்தில் அனீத்திக்கு கல்லீரல் நோய் இருப்பதாகவும், உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பெருந்தொகை செலவாகும் என்பதால் பாகிஸ்தான் அரசிடம் உதவிக்கு முறையிட்டுள்ளதுடன், பொதுமக்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.