உழைப்பே உயர்வு தரும்

Report Print Gokulan Gokulan in மதம்

உழைப்பு குறித்து இஸ்லாம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. உழைப்புதான் ஒரு மனிதனை உயர்த்தும் என்பதை நபிகள் நாயகம் அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்கள்.

உழைக்காமல் பிறரின் உழைப்பில் தங்கள் காலத்தை கழித்துவிடலாம் என்று எண்ணுபவர்களை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

அதேபோல் உழைக்காமல் இறைவன் கொடுப்பான் என்று பள்ளிவாசலில் முடங்கி கிடப்பதிலும் எந்த பிரயோசனமும் இல்லை என்பதை இஸ்லாம் அழுத்திச் சொல்கிறது. உடலில் வலு இருந்தும் உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

நபிகள் நாயகம் அவர்களிடம் ஓர் இளைஞன் வந்து யாசகம் கேட்டான். அவனைப் பார்த்த நபியவர்கள் ‘உன்னுடைய வீட்டில் ஏதேனும் இருக்கிறதா?’ எனக் கேட்டார்கள். ‘ஒரே ஒரு போர்வைதான் உள்ளது’ என்று அந்த இளைஞன் கூறினான்.

அந்த போர்வையை கொண்டு வரச் செய்த நபியவர்கள், அந்த போர்வையை ஏலம் விட்டார்கள். அந்த பணத்தைக் கொண்டு கோடரி ஒன்றை வாங்கி அந்த இளைஞனிடம் கொடுத்துவிட்டு ‘காட்டிற்கு சென்று விறகு வெட்டிப் பிழைத்துக்கொள். யாசகம் கேட்பதைவிட அதுதான் சிறந்தது’ என்று கூறி அந்த இளைஞனை அனுப்பி வைத்தார்கள்.

பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் வந்தான் அந்த இளைஞன், ‘தற்போது நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். தங்களுக்கு நன்றி கூறவே வந்தேன்’ என்று நன்றி சொல்லி விடைபெற்று சென்றான்.

பொருள் வேண்டுவோருக்கு பொருளைக் கொடுப்பதைவிட பொருள் ஈட்டக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு வழிவகைகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் நபிகள் நாயகம் அவர்களின் மூலம் மனித சமூகத்திற்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் நற்செய்தியாகும்.

ஒருவர் தன் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது’ என நபியவர்கள் தன் தோழர்களிடம் குறிப்பிடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் உழைப்பின் மூலமே தனது வாழ்வையும் அவர்கள் அமைத்துக்கொண்டார்கள்.

மிகப்பெரிய மார்க்க அறிஞராக, மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபராக நபியவர்கள் இருந்த போதிலும் தொடக்க காலத்தில் ஆடு மேய்ப்பது, பின்னர் வியாபாரம் செய்வதுமாகத்தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் மட்டுமல்ல இறை வனால் அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களும் உழைத்துதான் தங்களது காலத்தை கடினத்தோடு கழித்திருக்கிறார்கள்.

தனது செய்தியை மக்களிடம் எடுத்துரைப்பதற்காக அனுப்பப்பட்ட தூதர்களையே உழைத்து தான் வாழ வேண்டும் எனக் கட்டளை பிறப்பித்திருக்கிற இறைவன், மனிதர்கள் உழைக்காமல் உண்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வான்.

இறைவனிடம் கையேந்தினால் அவன் தருவான், அவன் தங்களது கஷ்டங்களை போக்குவான் என்ற நம்பிக்கையில் உழைக்கச் செல்லாமல் பள்ளிவாசலில் இறை வணங்குதலை மட்டுமே சிலர் மேற்கொண்டு வருகிறார்கள்.

அவர்களை நோக்கி தனது சாட்டையை உயர்த்தி கலீபா உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘உழைக்காமல், வருமானத்தைத் தேடி வெளியே செல்லாமல் உங்களில் எவரும் இருக்கக்கூடாது. அல்லாஹ்வே எனக்கு உணவை வழங்கு என பிரார்த்தனை செய்தால் மட்டும் போதாது. வானம் தங்கத்தையோ, வெள்ளியையோ மழையில் பொழிவதில்லை’.

உழைப்பின் அருமையை நாம் அனைவரும் உணர்ந்துகொண்டு, அதற்கு ஏற்ப இறைவனை வணங்கி, உழைத்து வாழ்வோம்.

- Maalai Malar

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்