இலங்கையில் கண்ணகி வழிபாடு ஒரு தொன்மை வாய்ந்த நம்பிக்கை வெளிப்பாடாகும்.
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவியான சோழ நாட்டில் பிறந்த கண்ணகி பாண்டி நாட்டில் வீரக் கற்பரசியாகி, சேர நாட்டிலே பத்தினித் தெய்வம் எனப் போற்றப்பட்டு, இலங்கையிலே சிங்கள மக்கள் மத்தியில் பத்தினி தெய்யோ என வணங்கப்படுகின்றாள்.
இரண்டாவது நூற்றாண்டில் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கஜபாகு என்கிற மன்னனால் கண்ணகி வழிபாடு சிங்கள மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டது என சிங்கள வரலாற்று நூல்களில் ஒன்றான இராஜாவளி என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள் போல் மயக்கும் சிரிப்பை உடையவள் என்னும் பொருள் விளங்கும்படி, 'கண்ணகி' என்றனர். கண்+நகி என்று பிரித்து சிரிக்கின்ற மலர்ந்த கண்ணைக் கொண்டவள் என்றும் விளக்கம் கூறப்படுகின்றது.
கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள்.
தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும் அவனது அரசி கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் மதுரையை எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்துகொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியை பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு பகுதியில், மட்டக்களப்பு பகுதியிலேயே கண்ணகி வழிபாடு பெரும்பாலும் காணப்படுகிறது.
இப்போது ஒரு புத்த சமய விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போது பத்தினி தெய்யோ தொற்று நோய்கள், பஞ்சம், வறட்சி ஆகியவற்றிலிருந்து காக்கும் தெய்வமாக சிங்கள மக்கள் வழிபடுகின்றார்கள்.