செவிலித்தாய் ஹலீமாவின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் பல நன்மைகளையும் வளங்களையும் தந்தான், அது குழந்தை முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு ஹலீமாவின் குடும்பத்தாருடன் இருப்பதால் அவர்களுக்குக் கிடைக்கிறது என்று ஹலீமா நம்பினார்.
அதனால் குழந்தை பால்குடி மறக்கடிக்கப்பட்ட பிறகும் முஹம்மது (ஸல்) இன்னும் சில காலம் தங்களுடன் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியதால் தாய் ஆமினாவும் சம்மதம் தெரிவித்தார்.
முஹம்மது (ஸல்) அவர்கள் தனது 4 வயதில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென தோன்றிய வானவர் ஜிப்ரீல் முஹம்மது (ஸல்) வை பிடித்து மயக்கமடைய வைத்து அவரது நெஞ்சை திறந்து இதயத்தை வெளியே எடுத்துள்ளார்.
பின்பு, அதில் ஒட்டியிருந்த சதையை நீக்கிவிட்டு இது தான் உம்மிடமிருந்த சைத்தானுக்குரிய பங்கு எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, தங்க தாம்பூழத்தில் வெளியெடுத்த இதயத்தை வைத்து ஜம் ஜம் நீரினால் அதை சுத்தப்படுத்தி விட்டு இதயத்தை மீண்டும் இருந்த இடத்திலேயே பொருத்தியுள்ளார்.
இதைக் கண்ட உடன் விளையாடிய நண்பர்கள் நபியவரது தாயான ஹலீமாவிடம் சென்று முஹம்மது (ஸல்) கொலை செய்யபட்டார் எனக் கூற சம்பவ இடத்திற்கு பதறியடித்து குடும்பத்தாருடன் ஓடிச் சென்று பார்த்த பொழுது நபி அவர்கள் பயத்தில் நின்றிருந்தார்.
இதைக் கண்டு அதிர்ந்துபோன ஹலீமா நபி முஹம்மது (ஸல்) அவர்களை மக்காவிற்கு அழைத்துச் சென்று அவரது தாயாரிடமே ஒப்படைத்துவிட்டார்கள்.
இதையடுத்து, நபி அவர்கள் தனது 6 வயது வரை தன் தாயார் ஆமினாவுடன் முஹம்மது (ஸல்) வளர்ந்தார்கள். தாயார் ஆமினா தன் இறந்த கணவர் அடக்கம் செய்யப்பட்ட மண்ணறையைப் பார்க்க விரும்பினார்.
சிறுவராக இருந்த முஹம்மது (ஸல்) அவர்கள், தம் வீட்டுப் பணிப்பெண் மற்றும் தன் கணவரின் தந்தை அப்துல் முத்தலிப்புடன் மதீனாவிற்குச் சென்று அங்கு ஒரு மாதம் வரை தங்கி இருந்தார்.
அங்கிருந்து மீண்டும் மக்காவிற்கு வரும் வழியில் நோய்வாய்ப்பட்டு மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையேயுள்ள அப்வா என்ற இடத்தில் ஆமினா இறந்துவிட்டார்.
இந்நிலையில், சிரு வயதிலேயே அனாதையாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களை, அவரது தாத்தா அப்துல் முத்தலிப் மக்காவிற்கு பத்திரமாக அழைத்து வந்து அன்போடும், பாசத்தோடும் வளர்த்தார். தன் மகன்களை காட்டிலும், முஹம்மது (ஸல்) மீது மிகுந்த பாசத்தை வெளிகாட்டினார்.
(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் நூல் 1 ஹதீஸ் 261, இப்னு ஹிஷாம்)