திருநம்பியை காதலித்து கரம் பிடித்த திருநங்கை... கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என நெகிழ்ச்சி

Report Print Santhan in உறவுமுறை

கேரளாவைச் சேர்ந்த திருநங்கையான திருப்தி ஷெட்டி, திருநம்பி ஹிரித்திக் என்பவரை காதலித்து கரம் பிடித்தது எப்படி என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

என்னுடைய சொந்த ஊர் கேரளா. நான் என்னுடைய சிறு வயதிலே எனக்குள் இருக்கும் பெண்மையை உணர ஆரம்பித்தேன்.

ஆறாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கு சென்றேன். அதற்கு மேல் என்னை படிக்க அனுப்பவில்லை. இதனால் வேலை பார்த்துகிட்டே இருந்தேன்.

வீட்டுல யாரும் என்னை புரிந்து கொள்ளவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் என் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறினேன்.

இதனால் என் எதிர்காலம் கேள்வி குறியானது. அதன் பின் ஒருவழியாக என்னை மாதிரியான திருநங்கைகள் சமூகத்தோட சேர்ந்தேன்.

அப்போது ரெஞ்சு அம்மா என்பவர் தான் என்னை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பின் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

அப்போதே வாழ்க்கையில் எதற்காகவும் துவண்டு போகக்கூடாது என்று ரெம்ப உறுதியாகவே இருந்தேன். கடினமாக உழைத்தேன்.

இதனால் சொந்தமா ஹேண்ட்கிராப்ட் தொழில் பண்றேன். கைவினைப் பொருட்கள், ஆடைகளை விற்பனை செய்கிறேன்.

கேரளாவின் முதல் திருநங்கை தொழில்முனைவோர் என்கிற பட்டத்தை வாங்கியிருக்கேன். அதுமட்டுமில்லை Thripthi Handicrafts என்ற பிளே ஸ்டோர் ஆப் ஓப்பன் பண்ணியிருக்கேன். இதுதவிர, நிறையப் பள்ளி, கல்லூரிகளுக்கு தன்னம்பிக்கை பேச்சாளராகவும் செல்கிறேன்.

வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த போது தான் ஹிரித்திக்கை சந்தித்தேன் என்று கூறினார். கடந்த ஆண்டு நடந்த கண்காட்சி ஒன்றில் இருவரும் சந்தித்துள்ளனர்.

அப்போதே ஹிரித்திக்கிற்கு, திருப்தி மேல் காதல் வந்துள்ளது. ஆனால் முதலில் திருப்தி காதலை ஏற்கவில்லை. ஏனெனில் ஒரு வைராக்கியமாக சம்பாதிக்க வேண்டும் என்று இருந்ததால், திருப்திக்கு காதலிக்க நேரமில்லை கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், என்னைப் பொறுத்த வரை நன்றாக சம்பாதிக்க வேண்டும். நல்ல நிலைக்கு போக வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தேன்.

இதனால் காதல் எல்லாம் இப்போது தேவையில்லை என்று நினைத்தேன்.

ஆனால் அவர், என்னைத் தத்தெடுத்த ரெஞ்சும்மாவிடம் வந்து பெண் கேட்டார். பிறகு, ரெஞ்சும்மா என்கிட்ட வந்து அவருக்காக பேசினார்.

அவங்க பேசும்போதும் நான் சம்மதிக்கவில்லை. எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். எனக்கும் திருமணம் குறித்த கனவுகள் எல்லாம் இருந்தது.

ஒரு பையனை திருமணம் செய்து எத்தனை நாட்கள் அவருடன் வாழ முடியும். அதுக்கு நம்ம கம்யூனிட்டியைச் சேர்ந்தவங்களையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்.

ஹிரித்திக்கும் என்னை மாதிரி பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு கஷ்டப்பட்டு சம்பாதித்து அறுவை சிகிச்சை செய்தியிருக்கிறார் என்பதால் எனக்கு எப்பதுமே அவர் மேல் மரியாதை உண்டு. அதனால் இவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன்.

எங்கள் திருமணம் நான் நினைத்தது போன்றே கோவிலில் நடந்தது. திருமணத்திற்கு திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த பலரும் வந்திருந்தாங்க. நடிகர் ஜெயசூரியா, இயக்குநர் ரஞ்சித் சங்கர்னு திரைத்துறை சார்ந்த நண்பர்களும் வந்திருந்தார்கள் என்று கூறி முடித்தார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers