பழந்தமிழரின் காதல்: வியப்பால் விரியும் விழிகள்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் இலக்கண நூல். இதில் வரும் பொருளதிகாரத்தில் தலைவனுக்கும், தலைவிக்கும் அதாவது காதலர்கள் இருவருக்கும் இருக்கவேண்டிய ஒப்புமைகளைப் பட்டியலிடுகின்றார்.

பிறப்பே குடிமை ஆண்மை யாண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே

என்று மெய்ப்பாட்டியலில் குறிப்பிடுகின்றார்.

அதாவது, ‘பிறப்பு, ஒழுக்கம், ஆண்மை, பருவம், அன்பு, நிறை (மனதை ஒரு நிலையில் நிலை நிறுத்துதல்), அருள், அறிவு, செல்வம் ஆகியவை தான் காதலர்களிடம் இருக்க வேண்டிய பத்துப்பண்புகள்.

இந்தப் பண்புகள் நிறைந்தவர்கள் சேர்ந்து வாழ்கிற போதுதான் வாழ்க்கை தித்திப்பாகும் என்கிறது இலக்கணம். தித்திப்புதரும் வாழ்க்கை இந்தப் பத்துக்குள்தான் இருக்கின்றது.

தலைவனுக்குத் தகுதியில்லாத குணங்கள்

இதே மெய்ப்பாட்டியியலில்,

‘நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல் பொச்சாப்பு மடிமையோடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை
என்றிவை யின்மை என்மனார் புலவர்’

என்று தலைவனுக்குத் தகுதியில்லாத குணங்களையும் விளக்கியுள்ளார்.

இந்த நூற்பாவின்பொருள்:

நிம்பிரி – அழுக்காறு, பொறாமை

கொடுமை – பிறருக்குக் கொடுமை செய்தல்

வியப்பு – தலைவியிடத்தில் தெய்வத்தன்மை போன்ற அழகிருப்பதாக வியத்தல்

பிறமொழி – புறங்கூறுதல்

வன்சொல் – கடுஞ்சொல் கூறுதல்

பொச்சாப்பு – சோர்வு

மடிமை – சோம்பல், முயற்சி இல்லாமை

குடிமை – பிறர்குடியைத்தாழ்த்தி தன் குடியைப் பாராட்டுதல்

இன்புறல் – ஒருவரில் ஒருவர் தாமே இன்புறுவதாக நினைத்தல்

ஏழைமை – பேதமை, மடமை

மறப்பு – மறதி

ஒப்புமை – ஆண் பிற பெண்ணைப் பார்க்கும்போது நெகிழ்ச்சி அடைதல்.

இவையெல்லாம் தலைவனுக்குரிய தகாத பண்புகள் என்பதைப் படிக்கும்போது பழந்தமிழரின் காதல் ஒழுக்கத்தைக்கண்டு விழிகள் வியப்பால் விரிகின்றன.

அதனால்தானே சங்ககாலம் பொற்காலம் என்று போற்றிப் புகழ்கின்றோம்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments