தமிழ்மொழி அமுலாக்கல் பேச்சளவில் மட்டுமே! மக்கள் விசனம்!

Report Print Samy in அரசியல்
51Shares
51Shares
ibctamil.com

கல்வி அமைச்சின் சுற்று நிருபங்கள் கண்டிப்பாக தமிழ் மொழியிலும் வெளியிடப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளதாக செய்தியொன்று அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்த அறிவிப்பு உண்மையில் வரவேற்கத்தக்கது.

இச்சுற்று நிருபம் வட, கிழக்கு மற்றும் மலையக மக்களின் நன்மை கருதியே செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் வடக்கு, கிழக்கிற்கு வெளியே இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் பரந்து வாழும் தமிழ், முஸ்லிம்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படாதிருப்பது கவலை தருகின்றது.

தமிழ் மொழி அமுலாக்கல் இன்னமும் பூரணமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது உண்மை.

கல்வி அமைச்சு உட்பட அனைத்து அமைச்சுக்கள், அரச திணைக்களங்களின் சுற்று நிருபங்கள், படிவங்களிலும் தமிழ் மொழி இடம்பெறுவது அவசியம்.

ஆனால் தனிச் சிங்களத்தில் மட்டும் அமைச்சுகளிலும், திணைக்களங்களிலும் காரியங்கள் நடைபெறுகின்றன. முக்கியமான ஆவணங்கள், படிவங்கள் தனிச் சிங்களத்திலேயே வெளியிடப்படுவது கவலைக்குரியது.

வட, கிழக்கு, மலையகப் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் சுற்று நிருபங்களை விளங்கிக்கொள்வதில் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக தெற்கில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களால் சிங்கள மொழியில் சரளமாகப் பேச முடிகின்ற போதிலும் சுற்று நிருபங்கள், படிவங்களை வாசித்து விளங்கிக் கொள்வதில் கஷ்டப்படுகின்றனர்.

படிவங்களை அரைகுறையாக வாசித்து நிரப்பி பிழையான தகவல்கள் வழங்கிய காரணங்களினால் உண்மையான தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாது தடுமாறுகின்றனர்.

தமிழ் மொழிக்கும் சம உரிமை வழங்கப்படும் என்றும் முற்று முழுதாக மொழி அமுலாக்கல் நடைபெறும் என்றும் கூறப்பட்ட போதிலும், சில அலுவலகங்களில் தமிழ் மொழியில் எந்த ஒரு படிவத்தையோ காண முடிவதில்லை.

அரச திணைக்களங்களில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளும் கடமையில் இல்லாதது கவலைக்குரியது.

அண்மையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தனிச் சிங்களத்தில் மட்டும் விபரங்களை மீள் ஆய்வு செய்வதற்கான படிவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்படிவத்தை நிரப்பி கிராம சேவகரின் சிபாரிசுடன் பிரதேச செயலகத்தின் கையளிக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள ஓய்வூதியக்காரர்கள் அதனை விளங்கி சரியாக பூரணப்படுத்திக்கொள்ள முடியாமல் சிங்களம் தெரிந்தவர்களிடம் அலைகின்றனர். இந்த நிலை என்று மாறுமோ தெரியவில்லை.

உண்மையாகவே தமிழ் மொழிக்கு சம உரிமை அல்லது அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தால் சுற்று நிருபங்களும், அரச திணைக்களங்களினாலும் வெளியிடப்படும் அனைத்து ஆவணங்களும் இரண்டு மொழிகளிலும் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

அப்போது தான் கால தாமதங்கள் நீங்கி கருமங்கள் இலகுவாக்கப்படும். அனைத்து இன மக்களின் தேவைகள் தாமதமின்றி நிறைவேற்றப்படுவதற்கு வழிபிறக்கும்.

அதனைத் தவிர்த்து வெறும் சொல்லளவில் மட்டும் மொழி அமுலாக்கல் இருந்தால் என்ன பயன்?

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்