மனிதர்கள் அணிந்து கொள்ளக்கூடிய வகையில், உலகிலேயே முதல்முறையாக ரோபோ உடை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
மனிதனும், ரோபோ இணைந்து இயங்கக்கூடிய தொழில்நுட்பம் தான் இந்த ரோபோ உடை. முக்கியமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூளையில் இருந்து வரும் கட்டளைகள் மூலமாகவே மனித உறுப்புகள் இயங்கும். அந்த கட்டளை அனுப்பப்படாததாலேயே மனித உறுப்புகள் செயல் இழந்து விடுகின்றன. ஆனால், இந்த ரோபோ உடை மூளை நரம்புகளுக்கு அழுத்தம் கொடுத்து, குறிப்பிட்ட உறுப்புகளுக்குக் கட்டளைகளை அனுப்பி வைக்கிறது.
அதன் மூலமாக அந்த உறுப்புகள் செயல்படத் தொடங்கிவிடும். ஆண்டு கணக்கில் நடக்க முடியாமல் இருப்பவர்கள் கூட இந்த உடை அணிந்தால் மாடிப்படிகளிலேயே ஏறி விடலாம் என்று கூறப்படுகிறது.
இதனை தயாரித்த சைபர்டைன் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி யூஷூகி ஷங்காய் கூறுகையில், ’மனித மூளையும், பயோ எலக்ட்ரிக் சமிக்ஞைகளையும் இணைத்து, உடல் உறுப்புகளைச் செயல்பட வைக்க நினைத்தோம்.
அதற்காக 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தோம். ஆரம்பத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனினும், தொடர்ச்சியான முயற்சியால் 6 ஆண்டுகளுக்கு முன்பு பயன் அளிக்கக்கூடிய வகையில் ரோபோ உடையைத் தயாரித்து விட்டோம்.
ஆனால், அதன் முதலில் எடை 22 கிலோவாக இருந்தது. இதை எல்லோராலும் அணிந்து கொள்வது கடினம் என்பதால், 10 கிலோவுக்கும் குறைவான எடை கொண்ட ரோபோ உடைகளை உருவாக்கிவிட்டோம்.
இது மிகவும் வசதியாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார். இந்த ரோபோ உடையை மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, சாதாரணமானவர்களும் அணிந்து கொண்டால் அசாதாரணமான காரியங்களைச் செய்ய முடியும்.
40 கிலோ எடை உடைய ஒரு பொருளைக் கூட இந்த உடை மூலமாக சாதாரணமாகத் தூக்க முடியும் என கூறப்படுகிறது.