எங்கள் குடும்பத்தாரை அப்படி பேசாதீர்கள்! பார்ட்டி சர்ச்சை குறித்து மாலிக்-சானியாமிர்சா விளக்கம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்தினம், பாகிஸ்தான் அணி வீரர் சோயிப் மாலிக் தனது மனைவி சானியா மிர்சாவுடன் பார்ட்டியில் கலந்துகொண்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியாவுடனான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியைத் தழுவியது, அந்நாட்டு ரசிகர்களை வெகுவாக வெறுப்படையச் செய்தது. இதனால் கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்த நிலையில்,

பாகிஸ்தான் அணி வீரர் சோயிப் மற்றும் அவரது மனைவி சானியா மிர்சா இருவரும், போட்டிக்கு முந்தைய நாள் பார்ட்டிக்கு சென்ற புகைப்படங்கள் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், போட்டிக்கு முன்பாகவே புகைப்படம் குறித்த ட்வீட் செய்திருந்த சானியா மிர்சா, எங்களுடன் ஒரு குழந்தை இருந்தபோதிலும், எங்களது தனியுரிமையை மதிக்காமல், எங்களை கேட்காமல் வீடியோ எடுக்கப்பட்டது.

அது ஒரு இரவு விருந்து. போட்டியில் தோற்றாலும் மக்கள் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். எனினும், சானியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், துரித உணவுகள் கிடைக்கும் ஹொட்டலுக்கு உங்கள் குழந்தையை அழைத்துச் செல்கிறீர்களே என்று சானியாவை குறிப்பிட்டு ட்வீட் செய்தார்.

அதற்கு பதிலளித்த சானியா மிர்சா, தான் குழந்தையை ஹொட்டலுக்கு அழைத்துச் செல்லவில்லை என்றும், தனது மகனின் உடல்நிலையை மற்றவர்களைக் காட்டிலும் கவனமாக பராமரிப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ட்விட்டரில் இருந்து இடைவெளி எடுக்க உள்ளதாக சானியா மிர்சா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்துள்ள ட்வீட்டில்,

‘ட்விட்டர் என்னை சிதைக்கிறது மற்றும் நிச்சயமாக சில மக்களும் தான். உங்களுடைய விரக்தியை வெளியேற்றும் ஊடகங்கள் உங்களுக்கு தேவை.. அமைதியுடன் இருங்கள், இது இடைவெளிக்கான தருணம்’ என தெரிவித்துள்ளார். மேலும், சோயிப் மாலிக் இந்த சர்ச்சைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பாக கூறுகையில்,

‘வீரர்கள் சார்பில் நான் ஊடகங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். ரசிகர்களும், மக்களும் எங்கள் குடும்பத்தினருக்கு உரிய மரியாதையையும், கண்ணியத்தையும் அளியுங்கள். மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பிரயோகம் செய்யாதீர்கள். யாரையும் மோசமான முறையில் விவாதத்திற்கு அழைக்கக் கூடாது. அது சரியானதும் அல்ல.

நாங்கள் ஹொட்டலில் சாப்பிடும் காட்சி குறித்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து யாரும் யோசிக்கவில்லை. அந்தக் காட்சிகள் அனைத்தும் 13ஆம் திகதி எடுக்கப்பட்டவை. நாங்கள் போட்டிக்கு முந்தைய நாளில் எங்கும் செல்லவில்லை. பாகிஸ்தான் ஊடகங்கள் எப்போதுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்படப் போகின்றன? கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் நாட்டுக்காக விளையாடுகிறேன். ரசிகர்கள் பேசுவதை கேட்டும், என் சொந்த வாழ்க்கை தொடர்பாக விளக்கம் அளிப்பதும் வேதனையாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்