இலங்கை தொடரால் என் வாழ்க்கையே மாறிடுச்சு! மனம் திறந்த தமிழக வீரர் விஜய் ஷங்கர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கையில் நடந்த நிதாஹஸ் டிராபியின்போது நடந்த சம்பவங்கள் குறித்து, இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் விஜய் ஷங்கர் மனம் திறந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் தமிழக வீரர் விஜய் ஷங்கர், உலகக்கோப்பை அணியிலும் இடம்பிடித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை நிரூபித்தார்.

ஆனால், கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த நிதாஹஸ் டிராபியின்போது கடுமையான விமர்சனத்திற்குள்ளானார். இந்நிலையில் நிதாஹஸ் கோப்பையின்போது நடந்த சம்பவங்கள் குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘ஒரு கிரிக்கெட்டராக என் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் என்றால் நிதாஹஸ் டிராபிதான். இது உண்மை. இது நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. எல்லோரும் என்ன நடந்தது, எப்படி கடினமாக இருந்தது என்று எனக்குத் தெரியும்.

அன்றைய தினம் மட்டும் ஒரு 50 தொலைபேசி அழைப்புகள் பேசியிருப்பேன். அனைவரும் ஊடக நபர்கள்தான். எல்லோரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்கள். அதையே தான் வலைதளங்களிலும் கூறிக்கொண்டிருந்தனர். அது எனக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. ஏமாற்றத்துடன் இருந்த நான் சில மணி நேரங்கள் இதிலிருந்து வெளியே செல்ல வேண்டும் என நினைத்தேன்.

அன்றைக்கு நடந்த இந்த சம்பவங்கள் அனைத்தும் எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து செல்ல வேண்டும் என எனக்குக் கற்றுக்கொடுத்தது. இன்றோடு உலகம் நின்றுவிடப் போவதில்லை என்பதை அந்த ஒரு மோசமான நாள் உணர்த்தியது. எனக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை. இதுமாதிரி பல்வேறு வீரர்களுக்குப் பல ஆண்டுகளாக நடந்துள்ளது.

இதில் ஒரு நல்ல விடயம், அன்று என் பேட்டிங் குறித்துத்தான் விமர்சிக்கப்பட்டது. அந்தத் தொடரில் நான் பந்துவீசியிருந்தேன். அந்த ஒரு போட்டியில் தான் துடுப்பாட்டம் செய்தேன். அப்போது இப்படியெல்லாம் நடக்கும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் அன்று நடந்தவை எனது வாழ்நாள் பாடமாக அமைந்தது.

ஒவ்வொரு நிகழ்வும் தற்காலிகம் தான். நாம் நூறு சதவித உழைப்பைக் கொடுக்க வேண்டும் என அன்றைய பாடம் எனக்கு கற்றுக்கொடுத்தது. டோனி, கோஹ்லி, ரோஹித் ஷர்மா போன்றவர்களைப் பார்க்கும்போது எனக்கும் அந்த ஆசை வந்தது.

இவர்களிடமிருந்து மோசமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது எனக் கற்றுக்கொள்ள நினைத்தேன். இதற்காக இவர்களின் ஆட்டத்தை எப்போதும் கண்காணித்து கொண்டிருப்பேன். அதேபோல் அவர்களிடம் பேசியது ஒரு கிரிக்கெட் வீரராக என்னை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவியது.

நீ உனது பணியைச் செய். உன்னுடைய கவனம் முழுவதும் நீ செய்யப் போகிற விடயத்தில் தான் இருக்க வேண்டும் என எப்போதும் அவர்கள் என்னிடம் கூறுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers