நான் டோனி குறித்து அப்படி கூறவேயில்லை! பதறியடித்து விளக்கம் கொடுத்த குல்தீப் யாதவ்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

டோனி குறித்து நான் கூறியதாக வந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போதைய விக்கெட் கீப்பர்களில் சிறந்தவராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி திகழ்ந்து வருகிறார். அதற்கு காரணம் துடுப்பாட்ட வீரரின் மனநிலையை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அதற்கு ஏற்றபடி சுழற்பந்து வீச்சாளர்களை பந்துவீச வைத்து பீல்டிங்கையும் அமைப்பார்.

டோனியின் அறிவுரையின்படி சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆனால், டோனியின் அறிவுரை குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியதாக வெளியான செய்தி ஒன்று, நேற்றைய தினம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது டோனியின் அறிவுரை தனக்கு அதிக முறை தப்பாகத்தான் முடிந்தது என்றும், அவர் கூறுவது போல் பந்துவீசி அது சரியாக அமையாவிட்டாலும் அதனை நீங்கள் அவரிடம் சென்று கூற முடியாது என்றும் தெரிவித்தார்.

அத்துடன், டோனி அதிகம் பேச மாட்டார். அதுவும் ஓவர்களுக்கு இடையேதான் வந்து பேசுவார். முக்கியமான விடயத்தை பந்துவீச்சாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே வந்து சொல்வார் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதங்களை கிளப்பியது. அதன் விளைவாக டோனி ரசிகர்கள் குல்தீப்பை கடுமையாக திட்டித் தீர்த்தனர். இந்நிலையில், டோனி குறித்து நான் கூறியதாக வெளியான செய்தி பொய்யானது என்று குல்தீப் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர் இதுதொடர்பாக கூறுகையில், ‘இங்கே, எந்தவித காரணமில்லாமல் மலிவான வதந்திகளை உருவாக்க விரும்பும் நமது மீடியாக்களின் மற்றொரு சர்ச்சையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

சில பேரால் இந்த செய்தி பரவி வருகிறது, இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. மதிப்பிற்குரிய டோனி குறித்து நான் எந்தவொரு விரும்பத்தகாத செய்தியும் கொடுக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்