உயிரை உலுக்கும் நிமிடங்கள்... உறக்கமில்லா இரவு: தீவிரவாத தாக்குதலை விவரிக்கும் தமீம் இக்பால்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய அந்த சில விநாடிகள் குறித்து வங்கதேசம் வீரர் தமீம் இக்பால் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

வங்கதேசம் கிரிக்கெட் அணியினர் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்த போது கிறைஸ்ட்சர்ச்சில் இரு மசூதிகளில் அந்த கொடுரமான துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது.

சம்பவத்தன்று மசூதியில் நடக்கும் தொழுகையில் பங்கேற்பதற்காக வங்கதேசம் வீரர்கள் சென்றிருந்தனர். ஆனால் சில காரணங்களில் அவர்கள் நினைத்த நேரத்திற்கு மசூதிக்கு செல்ல முடியாமல் போனது.

அந்த தாமதத்தினால் தான் அவர்கள் இன்று உயிரோடு உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் தற்போது தமீம் இக்பால் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மஹ்முதுல்லா இருவரும் மதபிரசாரங்கள் தவறாமல் கேட்பார்கள். இதன் காரணமாகவே நாங்கள் மசூதிக்கு விரைவாகச் செல்ல திட்டமிட்டோம்.

நாங்கள் சரியாக மதியம் 1.30 மணிக்குப் பேருந்தில் இருந்து புறப்படுவது என முடிவு செய்தோம். எங்களுக்கான பேருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக வந்தது.

ஆனால் அதற்குள் மஹமுதுல்லா செய்தியாளர்கள் சந்திப்பு சென்றுவிட்டார். இதனால் நாங்கள் அவருக்காகக் காத்திருந்தோம்.

மைதானத்தில் இருந்து புறப்பட்டு தொழுகையை முடித்துக்கொண்டு நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு அவர் நேராக ஓய்வறைக்கு வந்துவிட்டார்.

பின்னர் சிறிது காலதாமதமாக, நாங்கள் பேருந்தில் மசூதிக்குப் புறப்பட்டோம். தொழுகையை முடித்துக்கொண்டு விடுதிக்குத் திரும்புவதால் எங்களுடன் டீம் அனலிஸ்ட் ஸ்ரீநிவாஸ், சவுமியா சர்க்கார் இருவரும் வந்தனர்.

பேருந்தில் எப்போதும் நான் இடதுபுறத்தில் 6-வது இருக்கையில் தான் அமருவேன். பேருந்து மசூதிக்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது வலதுபுறத்தில் அமர்ந்திருந்தவர் ஜன்னல் வழியாகச் சாலையில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒருவர் சாலையில் படுத்துக்கிடந்தார். குடித்துவிட்டு சாலையில் மயங்கிக் கிடக்கலாம் என நினைத்தோம்.

பேருந்து மசூதியை அடைத்தது. ஆனால் எங்கள் கவனம் எல்லாம் சாலையில் படுத்துக்கிடந்தவர் மீது தான் இருந்தது.

ஒரு கனம் நான் திரும்பிய போது எனக்கு எதிர்த்திசையில் ஒருவர் ரத்தக்காயங்களுடன் சாலையில் கிடப்பதை கண்டேன். அந்த கணமே நான் பீதியடைய தொடங்கிவிட்டேன்.

எங்கள் பேருந்து ஓட்டுநர் மசூதிக்கு முன்பாக நின்றுகொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் பேச்சுக்கொடுத்தார்.

அந்தப்பெண் பதற்றமாகவும் நடுக்கத்துடனும் காணப்பட்டார். அங்கு யாரோ துப்பாக்கியால் சுடுகிறார்கள், அங்குப் போக வேண்டாம்.. போக வேண்டாம் என்றார்.

பேருந்து ஓட்டுநர் இவர்கள் மசூதிக்கு தான் வந்துள்ளனர் என்றார். வேண்டாம்.. வேண்டாம்... மசூதிக்குப் போக வேண்டாம்.. அங்கு தான் துப்பாக்கியால் சுடுகிறார்கள் என்றார்.

எங்களுக்கு அந்த நொடி பயம் தொற்றிக்கொண்டது. மசூதியின் வாசலில் ரத்த கரைகளுடன் சில உடல்கள் கிடந்தன. அந்த தருணத்தை இப்போது நினைத்தாலே எனக்குப் பேச்சு எல்லாம் குளறுகிறது.

அப்போது, கடுமையான ரத்த காயங்களுடன் மசூதிகளில் இருந்து சிலர் வெளிவரத் தொடங்கினர். என்னுடைய மொத்த உடலும் உறைந்து போய் இருந்தது. எங்களுடைய உணர்ச்சிகளை அந்தச் சமயத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை.

மரணத்தைக் கண்களில் பார்த்த தருணம் அது. அதனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நாங்கள் விடுதிக்குச் சென்று ரியாத் அறையில் இருந்த டிவியில் துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோவை கண்டோம்.

நாங்கள் அனைவரும் அழுது விட்டோம். இதில் இருந்து விடுபட எங்களுக்கு நீண்ட காலம் பிடிக்கும். குடும்பத்தினர் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

எங்களுக்கு கவுன்சிலிங் தேவை. நான் கண்களை மூடினாலே அந்தக் காட்சிகள் தான் நிழலாடுகிறது. அந்த இரவு நாங்கள் தனியாக உறங்கவில்லை. வீரர்கள் அனைவரும் ஒன்றாகத் தான் உறங்கினோம். கனவுகளில் அவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து சுடுவதை போல் இருக்கிறது என்றார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்